Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் - மழைநீர் கால்வாயை தூர்வாரும் பணி : ஆட்சியர், ஆணையர் தொடங்கிவைத்தனர்

வடகிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக, கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் மாபெரும் தூய்மைப் பணி முகாம் நேற்று தொடங்கியது.

கோவை கூட்ஷெட் சாலையில்தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

ஆட்சியர் பேசும்போது, “தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, கோவை மாவட்டத்தில் மாபெரும் தூய்மைப் பணி முகாமின் ஒருபகுதியாக மாநகராட்சியில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அனைத்து நீர் வரத்து கால்வாய்கள், மழைநீர் வடிகால் களில் தடையின்றி மழைநீர் செல்ல ஏதுவாக தூர் வாரப்படும்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 42.35 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால்கள் தூய்மைப்படுத்தப்படவுள்ளன. இப்பணியில் 10 ஜே.சி.பி. இயந்திரங்கள், 68 லாரிகள், 73 சிறிய ரக லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள், 5 மரக்கிளைகள் வெட்டுவதற்கான உபகரணங்கள், 600 மண்வெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதேபோல, மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது” என்றார்.

மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) பார்வதி, உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் திருமால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x