Published : 20 Sep 2021 03:18 AM
Last Updated : 20 Sep 2021 03:18 AM

வெளிநாடுகளில் திரட்டப்பட்டு பயன்படுத்தப்படாத ரூ. 960 கோடி : ஆந்திர அரசுக்கு மத்திய அரசு கேள்வி

வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து திரப்பட்ட ரூ. 960 கோடி தொகையை இன்னமும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான விளக்கத்தை அளிக்குமாறு ஆந்திர மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு நிதி மூலம் நிறைவேற்றப்படும் (இஏபி) திட்டங்களுக்காக இந்தத் தொகை திரட்டப்பட்டுள்ளது.

எந்தப் பணிகளுக்காக இந்த கடன் தொகை பெறப்பட்டதோ அத்துறைகளில் அதற்குரிய நிதி இல்லை. ஒப்பந்ததாரர்களுக்கு கோடிக்கணக்கான தொகை நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.

திரட்டப்பட்ட கடனுக்கான தொகையை திரும்ப செலுத்தாததால் இஏபி அடிப்படையில் இனி நிதி திரட்ட முடியாத சூழல் ஆந்திர மாநில அரசுக்கு உருவாகியுள்ளது. அத்துடன் பெறப்பட்ட கடன் தொகை மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டப் பணிகளும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை எட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரத் துறை (டிஇஏ) மிகக் கடுமையான கடிதத்தை ஆந்திர அரசுக்கு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக விரிவான விளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆந்திர மாநில அரசுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையின் அளவு அதிகரித்துள்ளது. அதேசமயம் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் திருப்திகரமாக இல்லை என்று தெரிகிறது. செப்டம்பர் 7-ம் தேதி வரையிலான காலத்தில் 12.46 கோடி டாலர் நிதி (சுமார் ரூ. 960 கோடி) திரட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஆந்திர அரசுக்கு அனுப்பிய கடித நகல் நிதி அமைச்சகத்தின் முதன்மை செயலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

வெளியிலிருந்து திரட்டப்பட்ட நிதியின் அளவு அதிகமாக இல்லை என்றாலும், அதற்கான வட்டி தொகை அதிகரித்து வருகிறது. அதேசமயம் பெறப்பட்ட கடன் மூலம் செயல்படுத்த வேண்டிய திட்டப் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை என பொருளாதார விவகாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தவிர சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகளிடம் டிஇஏ அதிகாரிகள் நேரடியாக தொலைபேசியில் பேசி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து திரட்டப்பட்ட நிதி மூலம் 14 திட்டப் பணிகள் ஆந்திர மாநிலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. உலக வங்கி, ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி, விவசாயத்துக்கான சர்வதேச செலாவணி நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி, மறு சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி, ஜப்பான் இன்டர்நேஷனல் கூட்டுறவு முகமை, புதிய மேம்பாட்டு வங்கி மற்றும் ஜெர்மனியின் கேஎப்டபிள்யூ ஆகியவற்றிலிருந்து கடனாக நிதி திரட்டப்பட்டுள்ளது.

6 திட்டப் பணிகளுக்காக ஏடிபி, ஏஐஐபி, ஐபிஆர்டி, ஐஎப்ஏடி ஆகியன 12.46 கோடி டாலரை முன்பணமாக வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராமப்புற சாலைத் திட்டம்

கிராமப்புற சாலை அமைக்க 66 கோடி டாலர் கடன் 2018-ம் ஆண்டு நவம்பரில் பெறப்பட்டது. இதில் 45 கோடி டாலர் கடன் வழங்கப்பட்டது.137 சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 13 மாவட்டங்களை உள்ளடக்கிய கிராமப்புற சாலைகளை நகர சாலைகளுடன் இணைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். மொத்தம் 6,323 கி.மீ. தூர சாலை அமைப்பதாக திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் இதுவரையில் 865 கி.மீ. தூரத்துக்குத்தான் சாலைகள் போடப்பட்டுள்ளன. 169 திட்டப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் முன்வரவில்லை என்றும், நான்குமுறை டெண்டர் விடப்பட்டதாகவும் மாநில அரசு குறிப்பிட்டுள்ளது. இதற்காக பெறப்பட்ட ரூ. 507 கோடி தொகையில் ரூ. 405 கோடி செலவிடப்பட்டுள்ளது. செப்படம்பர் 2020 நிலவரப்படி ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவை ரூ. 341 கோடியாகும். அத்துடன் பணி முடித்த ரூ. 349 கோடிக்கான ரசிதுகளும் வைக்கப்பட்டு அந்தத் தொகையும் கோரப்பட்டுள்ளது.

ஆனால் ரூ. 316 கோடிக்கான ரசீதுகள் மற்றும் நடைபெற்ற பணிகள் விவரம் உள்ளது. ஆனால் மற்றவற்றுக்கு போதிய விவரம் இல்லை என பொருளாதார விவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல மருத்துவ மற்றும் சுகாதாரத்துறைக்கு 46 கோடி டாலர் நிதி திரட்டப்பட்டது. இதை உலக வங்கி அளித்தது. ஆனால் மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட விவரங்களை இந்த நிதி மூலம் செயல்படுத்தியதாக ஆந்திர அரசு குறிப்பிடுவது திட்டப் பணிகள் ஆந்திர மாநிலத்தில் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதைக் காட்டுவதாகவும் டிஇஏ குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x