Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

வளர்ச்சி அதிகாரிகளுக்காக - எல்ஐசி நிறுவனம் சார்பில் ‘பிரகதி’ செயலி அறிமுகம் :

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (எல்ஐசி) பணியாற்றும் வளர்ச்சி அதிகாரிகளுக்காக ‘பிரகதி’ என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

‘பிரகதி’ (PRAGATI) என்ற இந்த பிரத்யேக செல்போன் செயலியை (App) எல்ஐசி நிறுவனத்தின் தலைவர் எம்.ஆர்.குமார் அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குநர்கள் முகேஷ் குப்தா, ராஜ்குமார், சித்தார்த்த மொஹந்தி, மினி ஐபே மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இன்றைய சூழலில் டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்தி, முக்கியவிவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக, வளர்ச்சி அதிகாரிகளை (டெவலப் மென்ட் ஆபீஸர்) பொறுத்தவரை, பிரீமியம் வசூல், முகவர்கள் ஒருங்கிணைப்பு குறித்த விவரங்களை பெறவும், உடனுக்குடன் மாறும் சந்தை நிலவரத்துக்கேற்ப மாற்றங்களை மேற்கொள்ளவும், முடிவுகள் எடுக்கவும் இந்த செயலி உதவியாக இருக்கும்.

சந்தாதாரர்களுக்கு சிறப்பான சேவை வழங்கும் நோக்கத்துடன், தொழில்நுட்ப வசதிகளை எல்ஐசி தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அதன்படி, முகவர்களுக்கான ‘ஆனந்தா’ செயலியும், ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் ‘ஜீவன் சாக்‌ஷயா’ செயலியும் வரவேற்பை பெற்றுள்ளன. ஆங்கிலம், இந்தி, மராத்தியில் இயங்கும் ‘எல்ஐசி மித்ரா’ சேவைக்கு தினசரி 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. இணையதளத்தில் 1.80 கோடிக்கும் அதிகமான பதிவு செய்த பாலிசிதாரர்கள் உள்ளனர். தினமும் 1.50 லட்சம் பேர் இணையதளம் மூலம் பல்வேறு சேவைகளை பெறுகின்றனர். அந்த வரிசையில், வளர்ச்சி அதிகாரிகளின் பணிக்கு உதவும் விதமாக தற்போது ‘பிரகதி’ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று எல்ஐசி தெரிவித்துள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x