Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளில் - நாடு முழுவதும் 2 கோடி பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை :

பிரதமர் நரேந்திர மோடியின் 71-வதுபிறந்தநாளை முன்னிட்டு, நாடுமுழுவதும் நேற்று 2 கோடிபேருக்கு மேல் கரோனா தடுப்பூசிசெலுத்தி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, சிறப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது. அதன்படி, ஒரேநாளில் 1 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிசெலுத்தப்பட்டுள்ளது. பலமுறைஇந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, தடுப்பூசி வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்த விரும்புவதாக பாஜக மூத்த தலைவர்கள் கூறினர்.

அதன்படி, மோடி பிறந்தநாளில் நாடு முழுவதும் 2.5 கோடிபேருக்கு தடுப்பூசி செலுத்த மத்தியஅரசு இலக்கு நிர்ணயித்தது. இந்தஇலக்கை அடைய கட்சித் தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாஜக ஆயத்தப்படுத்தியது.

திட்டமிட்டபடி, பிரதமர் மோடிபிறந்தநாளான நேற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. காலையில் தொடங்கி பிற்பகலுக்குள் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என மத்திய அமைச்சர்களும் பாஜக தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரஅமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளில் பிற்பகல் 1.30 மணி வரை, தடுப்பூசி 1 கோடியை கடந்துள்ளது. இன்று நாம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு புதிய சாதனை படைத்து அதை பிரதமருக்கு பரிசாக வழங்குவோம்’ என்று கூறியிருந்தார். வேக்சின் சேவா, ஹேப்பி பர்த்டே மோடிஜி என்ற ஹேஷ்டேக்குகளுடன் மாண்டவியா இதை பதிவிட்டிருந்தார். நேற்று மட்டும் சராசரியாக நிமிடத்துக்கு சுமார் 42 ஆயிரம் தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், நேற்று மதியம் வரை 5 லட்சம் டோஸ்கள் என்ற அளவை கடந்தது.இது கடந்த 7 நாட்களில் செலுத்தப்பட்ட சராசரி டோஸ்களைவிட அதிகமாகும். நேற்று பிற்பகல் வரை பிஹாரில் 7.3 லட்சம், மத்திய பிரதேசத்தில் 5 லட்சம் டோஸ்களை கடந்தது.

நாடு முழுவதும் நேற்று மாலை வரை 2 கோடி பேருக்குமேல் கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தப்பட்டது. இதை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சுகாதார ஊழியர்களுடன் கொண்டாடினார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. வெல்டன் இந்தியா’ என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x