Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாட்டம் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி உறுதிமொழி : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் உறுதி ஏற்றனர்

பெரியாரின் 143-வது பிறந்தநாள்சமூகநீதி நாளாக கொண்டாடப் பட்டது. இதையொட்டி, பெரியார்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் முதன்முதலாக சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

‘பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி ஆண்டுதோறும் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும். இந்நாளில் தலைமைச் செயலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூகநீதி உறுதிமொழி ஏற்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 6-ம் தேதி அறிவித்தார். அதன்படி, பெரியாரின்143-வது பிறந்தநாள் நேற்று சமூகநீதிநாளாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று, பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலைமைச் செயலகம் சென்றனர். அங்கு தலைமைச் செயலக கட்டிடத்தின் பின்புறம் அமைந்துள்ள ராணுவ மைதானத்தில், சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

முதலில், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பெரியார் உருவப் படத்துக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சமூகநீதி நாள் உறுதிமொழியை முதல்வர் வாசிக்க, பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் துறை செயலர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் உறுதி ஏற்றனர்.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘தமிழினத்துக்கு தொண்டு செய்யவே வாழ்ந்த பெரியாரின் பிறந்தநாளாம் இன்றுமுதல்முறையாக சமூகநீதி நாள்உறுதிமொழி ஏற்றேன். தமிழகம் முழுவதும் பலரும் என்னுடன் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டுள்ளனர். உயர்வு தாழ்வு இல்லாத சமத்துவ சமுதாயம் நோக்கிய நமது பயணம் தொடரும், வெல்லும்’’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் அறிவிப்புக்கிணங்க, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நேற்று சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை இந்து சமயஅறநிலையத் துறை அலுவலகத்தில், ஆணையர் குமரகுருபரன் தலைமையிலும், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநரகத்தில் இயக்குநர் வீரராகவ ராவ் தலைமையிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதுபோல, துறைகளின் தலைமை அலுவலகங்கள், ஆணையர் அலுவலகங்கள், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசுஅதிகாரிகள், ஊழியர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x