Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

தென்னையில் நோய் மேலாண்மை கருத்தரங்கம் :

ஆனைமலை வட்டாரத்தில் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மற்றும் தென்னை வேர் வாடல் நோய் மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குநர் (கோவை) சித்ராதேவி தலைமை வகித்தார்.

கருத்தரங்கில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சிகள் துறையைச் சேர்ந்த ஜெயராஜன் நெல்சன் பேசும்போது, “தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப் படுத்த பூச்சி மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. என்கார்சியா ஒட்டுண்ணிகள் அறுபது சதவீத வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துகின்றன. என்கார்சியா ஒட்டுண்ணிகள் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படு கின்றன. அவற்றை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். மேலும் கிரைசோபெர்லா, மல்லாடா போன்ற பச்சை கண்ணாடி இறக்கை பூச்சி இரை விழுங்கிகள் தென்னந்தோப்புகளில் வெள்ளை ஈக்களை நன்கு கட்டுப் படுத்துகின்றன.

இவற்றை தமிழ்நாடு வேளாண் பல்கலை. பூச்சியியல் துறை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் இயற்கை எதிரிகளைக் கொண்டு வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்” என்றார்.

ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் துறை பேராசிரியர் லதா, தென்னை மரங்களில் ஏற்படும் குருத்தழுகல், இலை கருகல், சாறு வடிதல், தஞ்சாவூர் வாடல் நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இந்த கருத்தரங்கில் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப் பாடு) மற்றும் ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x