Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM

டெல்லியில் கைதான தீவிரவாதிகள் பாக். ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் : வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்

டெல்லியில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்.

புதுடெல்லி / சென்னை

டெல்லியில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள், பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்று இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்ததையடுத்து, இந்தியாவில் செயல்படும் சில தீவிரவாத இயக்கங்கள் தங்கள் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்து வந்தன. மேலும் தசரா, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரும் நிலையில் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவும் தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து காஷ்மீர் உட்பட நாடு முழுவதும் தீவிரவாத அமைப்புகளின் நட வடிக்கைகளை ராணுவத்தினரும், போலீ ஸாரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தலைநகர் டெல்லியில் போலீஸார் நேற்று முன்தினம் நடத்திய தேடுதல் வேட்டையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜன் முகமது ஷேக், டெல்லியைச் சேர்ந்த ஒசாமா, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூல்சந்த், முகமது அபு பக்கர், ஜீஷான் கமர், முகமது ஆமிர் ஜாவீத் ஆகிய 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்காக பணியாற்றியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

பிடிபட்ட தீவிரவாதிகள் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜீஷான் கமரும், ஒசாமாவும் பாகிஸ்தான் ராணுவத்தில் ஆயுதப் பயிற்சி பெற்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜர் பதவியில் இருக்கும் காஜி என்பவர் தலைமையில் இவர்களுக்கு சிந்து மாகாணத்தில் உள்ள ரகசிய முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கையெறி குண்டுகளை தயாரிப்பது, இயந்திரத் துப்பாக்கிகளை கையாள்வது, சாதாரணமாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி ஒரு இடத்தை தீக்கிரையாக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் நடத்த இவர்கள் சதித் திட்டம் தீட்டியதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட 6 தீவிரவாதிகளில் 4 பேரை காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மற்ற இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் உஷார்

தமிழகத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவ தால் இங்கும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உளவுத் துறை கொடுத்த தகவலின்பேரில் தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட் டுள்ளன. காஷ்மீரைச் சேர்ந்த தீவிரவாதிகள் தென் மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று மத்திய உளவுப்பிரிவினர் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து தமிழக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வியாபாரிகள் பெயரில் அவர்கள் தென்மாநிலங்களுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத் தவும், முக்கிய நபர்களை கொலை செய்யும் நோக்கிலும் இவர்கள் வந்திருப்பதாக மத்திய உளவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். காஷ் மீரை சேர்ந்த பல வியாபாரிகள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களின் உதவியுடன், புதிதாக வியாபாரிகள் யாராவது காஷ்மீரில் இருந்து தமிழகம் வந்துள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. காஷ்மீர், டெல்லியில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளும் கண்காணிக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x