Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

நாட்டின் பாதுகாப்பு கருதி பெகாசஸ் வழக்கில் - விரிவான பதில் மனு தாக்கல் செய்ய விரும்பவில்லை : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி

நாட்டின் பாதுகாப்பு கருதி பெகாசஸ் வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய விரும்பவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட 50,000 பேரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டிருப்பது கடந்த ஜூலையில் தெரியவந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த 40 செய்தியாளர்கள் உட்பட 300 பேரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தி எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா, மூத்தபத்திரிகையாளர் என்.ராம், சசிகுமார், மார்க்சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் சர்மா உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு 2 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை தாக்கல் செய்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் பதில் மனுவில் உள்ள விவரங்கள் போதுமானதாக இல்லை. எனவே விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹிமா கோலி அமர்வு முன்பு வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர்கூறும்போது, ‘‘நாட்டின் பாதுகாப்பு கருதி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை. இது தொடர்பாக நிபுணர்கள் குழு ஆய்வு செய்யலாம். அந்த குழு அளிக்கும் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்’’ என்றார்.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஷியாம் திவான், ராகேஷ் துவிவேதி, மீனாட்சி அரோரா, காலின் கான்சால்ஸ் உள்ளிட்டோர் வாதிட்டனர்.

அவர்கள் கூறும்போது, ‘‘பெகாசஸ் விவகாரத்தில் எந்த விவரத்தையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கமாட்டோம் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட பிறகு தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹிமா கோலி கூறியதாவது:

விரைவில் இடைக்கால உத்தரவு

நாட்டின் பாதுகாப்பு தொடர் பான விவரங்களை நாங்கள் கோரவில்லை. சட்டவிரோதமாக மென்பொருளை பயன்படுத்தி குடிமக்களின் தகவல்கள் திருடப் பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்தே விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டோம்.

மத்திய அரசு பதில் மனுவைதாக்கல் செய்யும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவ டிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால்பதில் மனு தாக்கல் செய்ய விரும்பவில்லை என்று மத்திய அரசுகூறுகிறது. எனவே ஓரிரு நாட்களில் இடைக்கால உத்தரவைபிறப்பிப்போம். இவ்வாறு நீதிபதி கள் தெரிவித்தனர். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x