Published : 13 Sep 2021 03:14 AM
Last Updated : 13 Sep 2021 03:14 AM

மகளின் திருமண வரவேற்புக்கு சென்றபோது கோவை ரயிலில் - பயணி தவறவிட்ட ரூ.1.62 லட்சம் நகையை மீட்ட போலீஸார் :

மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவை விரைவு ரயிலில் சென்ற பயணி தவறவிட்ட ரூ.1.62 லட்சம் மதிப்புள்ள நகைகளை பெரம்பூர் ரயில்வே போலீஸார் உரியவரிடம் மீட்டுக் கொடுத்துள்ளனர்.

திருப்பத்தூர், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகளான சரண்யாவுக்கு கடந்த 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. பின்னர், நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி ராணிப்பேட்டையில் நடைபெற்றது. இதையடுத்து இதில் கலந்துகொள்ள கோயம்புத்தூர் விரைவு ரயிலில் காட்பாடி வரை கடந்த 11-ம் தேதி உறவினர்களுடன் ஆனந்தகுமார் பயணித்தார்.

ரயில் காட்பாடி ரயில் நிலையம் வந்த பின்னர் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு உறவினர்களுடன் இறங்கினார். பின்னர் ரயில் புறப்பட்டது. ஆனந்தகுமாரும் ராணிப்பேட்டை சென்றார். பின்னர் வீடு சென்று பார்த்தபோதுதான் நகை, பணம் வைத்திருந்த சூட்கேஸை ரயிலிலேயே தவற விட்டது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து அவர் உடனடியாக காட்பாடி ரயில்வே காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து காட்பாடி ரயில்வே போலீஸார் பெரம்பூர் ரயில்வே போலீஸாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ராமுதாய், மற்றும் காவலர் தேவேந்திரன் ஆகியோர் பெரம்பூர் ரயில் நிலையம் வந்து ஆனந்தகுமார் தவற விட்ட சூட்கேஸை மீட்டனர். அதில், ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள வைரக் கம்மல், ரூ.17,500 மதிப்புள்ள மோதிரம் உட்பட மொத்தம் ரூ.1 லட்சத்து 62,500 மதிப்புள்ள பொருட்கள் இருந்தது. அதை மீட்ட பெரம்பூர் ரயில்வே போலீஸார் அதை ஆனந்த குமாரை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x