Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 03:14 AM

அதிமுக முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் காலமானார் : முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ், பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல்

அதிமுக முன்னாள் அவைத் தலைவர், புலவர் புலமைப்பித்தன்(85) சென்னையில் நேற்று காலமானார்.

அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், தமிழக சட்ட மேலவை முன்னாள் துணைத் தலைவருமான புலவர் புலமைப்பித்தன் வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 31-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், நேற்று காலை 9.30 மணிக்கு காலமானார்.

புலமைப்பித்தன், கோவைமாவட்டம் பள்ளப்பாளையத்தில்1935 அக்.6-ல் பிறந்தவர். கோவை பேரூர் தமிழ்க் கல்லூரியில் புலவர்பட்டம் பெற்றவர். தமிழ் மொழியின் மீதும், தமிழ் இலக்கியங்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதனால் ராமசாமி என்ற தனதுபெயரை புலமைப்பித்தன் என்று மாற்றிக் கொண்டார். பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட அவர், அரசியலில் களமிறங்கினார்.

திரைப்படத் துறை மீது இருந்த ஆர்வத்தால் 1964-ல் சென்னை வந்தவர், சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1968-ல் வெளியான எம்ஜிஆர் நடித்த ‘குடியிருந்த கோயில்' திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். கடைசியாக நடிகர் வடிவேலு நடித்த ‘எலி' படம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை இயற்றியுள்ளார்.

எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களுக்கு புலமைப்பித்தன் எழுதிய பல பாடல்கள் இருவருக்கும் பெரும் புகழைத் தேடித்தந்தன. ‘இதயக்கனி’ திரைப்படத்தில் புலமைப்பித்தன் எழுதிய, ‘நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற’ என்ற பாடல், பட்டி தொட்டி எங்கும் அதிமுகவைக் கொண்டு செல்ல உதவியது.

எம்ஜிஆர் ஆட்சியில் புலமைப்பித்தன் அரசவைக் கவிஞராகவும், சட்டமேலவை துணைத் தலைவராகவும் இருந்தார். ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகத் தலைவராகவும், அதிமுகவின் அவைத் தலைவராகவும் இருந்தார்.

புலமைப்பித்தனின் உடல் வெட்டுவாங்கேணி, பாண்டியன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், திரைத்துறையினர், தமிழ்அமைப்பினர், பொதுமக்கள் எனஏராளமானோர் அவரது உடலுக்குஅஞ்சலி செலுத்தினர். அவரதுஉடல் இன்று காலை 10 மணிக்கு பெசன்ட் நகர் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

புலவர் புலமைப்பித்தன் மறைவுக்கு முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள்:

முதல்வர் ஸ்டாலின்: அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், கவிஞருமான புலமைப்பித்தன் மறைவு செய்தியறிந்து வருத்தமுற்றேன். திராவிட கொள்கைகளின் மீது பற்று கொண்டு, அரசியலில் தீவிரமாக இயங்கிய அவர், எம்ஜிஆருக்கு பக்க துணையாக இருந்தார். தமிழக அரசின் பெரியார் விருதைப் பெற்றவர். புலமைப்பித்தனை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அதிமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி: எம்ஜிஆரின் பேரன்பைப் பெற்ற, அதிமுக முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன் மறைவு செய்தியறிந்து வருத்தமுற்றோம். எம்ஜிஆரால் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டு தமிழ்த் தொண்டாற்றியவர். 'குடியிருந்த கோயில்’, ‘அடிமைப்பெண்’, 'நல்ல நேரம்’, ‘இதயக்கனி’, 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’, ‘எங்கம்மா மகாராணி’, ‘உலகம் சுற்றும் வாலிபன்' போன்ற திரைப்படங்களில் காலத்தால் அழியாத பாடல்களை எழுதி புகழ் பெற்றவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x