Published : 28 Aug 2021 03:12 AM
Last Updated : 28 Aug 2021 03:12 AM

காபூல் விமான நிலையத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 183 ஆக உயர்வு : மன்னிக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. இதில் 13 அமெரிக்க வீரர்களும் அடங்குவர்.

கடந்த 2001-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் நடந்துவந்த தலிபான்கள் ஆட்சியை அகற்றிய அமெரிக்கா, தனது படைகளை அங்கு நிறுத்தியிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த நாட்டில் இருந்து முழுமையாக படைகளைஅமெரிக்கா வாபஸ் பெற்றுள்ளது.இதன்காரணமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுனர்.

முன்னதாக, கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்கா - தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையம் அமெரிக்க படையின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதற்குள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளைச் சேர்ந்த படைகள், மக்கள் வெளியேற வேண்டும் என்று உடன்பாடு ஏற்பட்டது.

இதன்படி, கடந்த இரு வாரங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்துசுமார் 1.4 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியா சார்பில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் காபூல் விமானநிலையம் அருகே பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல் மற்றும் விமான நிலையத்தின் வடக்கு வாயிலில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதைத் தொடர்ந்துவிமான நிலையம் அருகே 3-வதுவெடிகுண்டும் வெடித்துச் சிதறியதாக உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ கடற்படை தளபதி கென்னத் கூறும்போது, ‘‘ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். அதன்பிறகு அந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

காபூல் விமான நிலைய தொடர் குண்டுவெடிப்புகளில் நேற்று வரை 183 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. 13 அமெரிக்க வீரர்கள்,170 ஆப்கானிஸ்தான் மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றிய உடன் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மூத்த தலைவரை கொலை செய்தனர்.

காபூல் மற்றும் பெரும்பான்மை பகுதிகள் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஆங்காங்கே திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். காபூல் விமான நிலைய தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது. ‘அமெரிக்க ராணுவத்துக்கு உதவியாக இருந்தவர்களை குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதலை நடத்தினோம்’ என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் காபூலின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ளனர். நேட்டோ நாடுகளைச் சேர்ந்த 8,500-க்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். அவர்களின் முகவரி, விவரங்கள் தலிபான்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளைச் சேர்ந்தவர்களை தலிபான்கள் மீட்டு காபூல் விமான நிலையத்துக்கு அழைத்து வர உள்ளனர்.

தீவிரவாத அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு விமான நிலைய வாயில் மற்றும் சுற்றுச்சுவரை ஒட்டி குழுமியிருந்த பொதுமக்களை தலிபான்கள் அகற்றியுள்ளனர். எனவே, அங்குள்ளவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஆவேசம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘‘அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். அவர்களை வேட்டையாடி தண்டிப்போம். சரியான நேரத்தில் தக்க தண்டனை வழங்கப்படும்’’ என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியர்களை மீட்போம்

இந்திய வெளியுறவுத் துறைசெய்தித் தொடர்பாளர் அரிந்தம்பாகி கூறும்போது, ‘‘ஆப்கானிஸ்தானில் இருந்து பெரும்பான்மையான இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளோம். கடந்த சில நாட்களில் 6 விமானங்கள் மூலம் 550பேரை மீட்டுள்ளோம். இதில் 260 பேர்இந்தியர்கள். இன்னும் சிலர்அங்கு சிக்கியுள்ளனர். அவர்களையும் பத்திரமாக மீட்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். நட்பு நாடுகளுடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x