Published : 06 Aug 2021 03:20 AM
Last Updated : 06 Aug 2021 03:20 AM

திருவல்லிக்கேணி தனியார் விடுதியில் தீ விபத்து : கனிமவளத் துறை துணை மேலாளர் உயிரிழப்பு

திருவல்லிக்கேணி பெரிய தெருவில் ‘பீஸ் பார்க் இன்’ என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த தங்கும் விடுதியின் தரை தளத்தில் இருந்து திடீரென தீப்பற்றி புகை வந்துள்ளது. சற்று நேரத்தில் தீயால் ஏற்பட்ட புகை மற்ற தளங்களுக்கு பரவியுள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்து திருவல்லிக்கேணி, மயிலாப்பூரில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு அதிகாரி ஜேம்ஸ் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உயிர் காக்கும் மூச்சுக் கருவிகளை முகத்தில் பொருத்திக்கொண்டு தங்கும் விடுதியில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். முதல் தளத்தில் இருந்த 7 பேர் மயக்க நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையில், திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸாரும் சம்பவ இடம் விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

தரை தளத்தில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தவர் மதுரை, மேலூரைச் சேர்ந்த அரவிந்தன் (52) என்பதும், அவர் சென்னையில் கனிமவளத் துறை துணை மேலாளராக பணியாற்றி வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அவரது உடலை பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ளஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x