Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் - ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கிவைக்கிறார் : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டுவதற்கான பிரத்யேக அறையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு,சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

அரசு மகப்பேறு மருத்துவ மனைகளில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதற்கான பிரத்யேக அறைகள்ஏற்கெனவே உள்ளன. இந்நிலையில், அரசு பொது மருத்துவமனையில் தற்போது முதல்முறை யாக அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தாய்மார்கள் பாலூட்டுவதற்கான பிரத்யேக அறைகள் விரைவில் திறக்கப்படும்.

17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 7 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகள் உள்ளன.கூடுதலாக 7 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், 5 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் தலா ரூ.12 லட்சம் செலவில் 12 தாய்ப்பால் வங்கிகள் தொடங்கப்பட உள்ளன.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை காலை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் மக்களை பரிசோதனை செய்து, பாதிப்பு உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகள் மட்டுமின்றி அனைத்து மருத்துவ சேவையும் அளிக்கப்படும். இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் நோய் உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்து கொடுக்கும் பணிகளை கண் காணிக்க உள்ளார்.

சமீபத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 என்ற அளவில் அதிகரித்தது. தொற்றை கட்டுப்படுத்த கூடுதல்கவனம் செலுத்துமாறு முதல்வர்தெரிவித்துள்ளார். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில்கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட் டது. விரைவான கரோனா பரிசோதனை மையத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப் படுகிறது. கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு வரும் 5-ம் தேதி முதல் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு தட்டுப்பாடின்றி தடுப்பூசிகள் வருகின்றன. இதுவரை 2 கோடியே 25 லட்சத்து 33,760 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 2 கோடியே 18 லட்சத்து 31,183 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கு வந்த 19 லட்சத்து 47,380 தடுப்பூசிகளில் 15 லட்சத்து 80,885 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள் மூலம் இதுவரை 2 கோடியே 34 லட்சத்து 12,068 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்துக்கு 79 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன. 2-ம் தவணைக்கு முன்னுரிமை அளித்து கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா 3-வது அலை குறித்து ஐஐடி, எய்ம்ஸ் மற்றும் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை கேட்டு வருகிறோம். 3-வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புஉள்ளதாக தகவல்கள் வந்ததால்,தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சை மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் உருமாறி உள்ளதா என்று கண்டறிய, தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சென்னையில் 2 இடங்களில் டெல்டா பிளஸ் வகை கரோனா வைரஸை கண்டறியும் ஆய்வகங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x