Published : 01 Aug 2021 06:28 AM
Last Updated : 01 Aug 2021 06:28 AM

பொதுமக்களிடம் காவல் துறை மீது உள்ள - எதிர்மறை எண்ணத்தை மாற்ற வேண்டியது அவசியம் : பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

காவல் துறை மீது பொதுமக்களுக்கு இருக்கும் எதிர்மறை எண்ணத்தை மாற்ற வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சர்தார் வல்லபபாய் படேல் போலீஸ் அகாடெமி உள்ளது. இதில் அண்மையில் பயிற்சி முடித்த நூற்றுக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகள், காவல் பணியில் சேர்வதற்கு தயாராக உள்ளனர். இந்நிலையில், பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து நமது எல்லைகளை ராணுவ வீரர்கள் பாதுகாக்கின்றனர். அதேபோல, உள்நாட்டில் உள்ள சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீஸார் தங்களது இன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றனர். சில சமயங்களில், பணி நிமித்தமாக அவர்களால் பல நாட்களுக்கு தங்கள் வீடுகளுக்கு கூட செல்ல முடியாது. பண்டிகை நாட்களில் கூட குடும்பத்தினருடன் இருக்க முடியாத சூழல் ஏற்படும். மக்களின் பாதுகாப்புப் பணியில் அவர்கள் ஈடுபட்டிருப்பார்கள். இத்தனை தியாகங்களை போலீஸார் செய்த போதிலும், பெரும்பாலான மக்களுக்கு காவல் துறை மீது எதிர்மறையான எண்ணமே இருக்கிறது.

கரோனா பரவல் தொடங்கிய போது, போலீஸார் தெருக்களில் இறங்கி மக்களுக்கு உதவி செய்தனர். இதனால் போலீஸார் மீதான தவறான எண்ணம் மக்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல அகன்று வந்தது. ஆனால், இப்போது மீண்டும் அதே எதிர்மறையான எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது. இந்த எண்ணத்தை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம். இதற்கு தேவையான நடவடிக்கைகளை புதிதாக பணியில் சேரவுள்ள ஐபிஎஸ் அதிகாரிகளாகிய நீங்கள் முன்னெடுக்க வேண்டும்.

வளர்ச்சியில் உங்கள் பங்கு

இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளும் தற்போது பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. எனவே, நீங்கள் பணியில் சேரவுள்ள காலம் என்பது மிக மிக முக்கியமானது. இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சியில் உங்களின் பங்கு மகத் தானதாக இருக்கும். இதனை மனதில் வைத்து நீங்கள் செயல்பட வேண்டும். மக்களுக்கு சிறப்பான நிர்வாகம் கிடைக்கப் பெறுவதை நீங்கள் எப்போதும் உறுதி செய்ய வேண்டும். எந்த நிலையிலும் தேசமே முதன்மையானது என்ற கொள்கையில் இருந்து நீங்கள் விலகி விடக் கூடாது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x