Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதை தடுக்க - ரூ.625 கோடியில் புதிய மின்மாற்றிகள் அமைக்க திட்டம் : அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

தமிழகத்தில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படக் காரணமாக உள்ள மின்மாற்றிகளை மாற்றுவதற்கு ரூ.625 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

மின் வாரியத்தின் அனைத்துமண்டல தலைமை பொறியாளர்கள், மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் பகிர்மான இயக்குநர் செந்தில்வேல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:

தமிழகத்தில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படக் காரணமாக உள்ள மின்மாற்றிகளை மாற்ற ரூ.625 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு, 6,830 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 7 கோட்டங்களில் மேலே செல்லும் மின்கம்பிகள் ரூ.1,283 கோடியில் புதைவடங்களாக மாற்றப்பட உள்ளன.

மின்நுகர்வோரின் புகார்களை சரிசெய்யும்போதும், மின்சாரஇணைப்பு வழங்கும்போதும், மின்கம்பங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வருவதற்கான வாகன வாடகை, பணியாளர் ஊதியம்போன்றவற்றை நுகர்வோரிடம்வாங்கக் கூடாது. இதுகுறித்துபுகார் எழுந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மின் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில் இதுவரை 1.71 லட்சம் புகார்கள் பெறப்பட்டு, அதில், 1.59 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படும். விவசாய மின் இணைப்புகோரி 4.50 லட்சம் விவசாயிகள்விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு விரைவில் மின் இணைப்புவழங்கப்படும். மின் வாரியத்துக்கு ரூ.1.59 லட்சம் கோடி கடன்சுமை உள்ளது. மேற்கொண்டு கடன்சுமை ஏற்படாமல், வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x