Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM

மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா தீவிரம் - தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

மேகேதாட்டு அணையை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசுதொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று பாமகநிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

‘காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும். அதற்கு அனுமதி பெற, மத்திய நீர்வளத் துறை அமைச்சரை ஓரிரு நாட்களில் சந்திக்க உள்ளேன்’ என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள அவர், தமிழகத்துடனான உறவை வலுப்படுத்த முயல்வதற்கு மாறாக, சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியில் அணை கட்டுவதும் இருமாநில ஒப்பந்தப்படி சாத்தியமற்றதுதான். ஆனால், அது குடிநீர் தேவைக்கானது என்று வாதிட்டு, அதற்கு கர்நாடகா அனுமதி பெற்றுஅணையை கட்டியும் முடித்துவிட்டது. அதேபோல, மேகேதாட்டு விவகாரத்தில் நடந்துவிடக் கூடாது.

இந்த விவகாரத்தில் இனி வரும் நாட்களில் எந்த நேரமும் திருப்பங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்.

காவிரி விவகாரத்தில் தமிழகஅரசுக்கு ஆலோசனை வழங்ககாவிரி தொழில்நுட்பக் குழு என்றஅமைப்பு ஏற்படுத்தப்பட்டதுபோல, மேகேதாட்டு விவகாரத்தை விழிப்புடன் கண்காணிக்கவும், ஆலோசனை வழங்கவும் நீர் மேலாண்மையில் வல்லமை பெற்ற அதிகாரி தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு உடனே அமைக்க வேண்டும். மேகேதாட்டு விவகாரம், நீர் மேலாண்மை திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வசதியாக, நீர்வளத் துறைக்கு தனி செயலரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் கோரிக்கை

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தின் எதிர்ப்புகளை புறம்தள்ளிவிட்டு, மேகேதாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளை மத்திய அரசு செய்வது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும். இந்தவிவகாரத்தை அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால், அனைத்துக் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x