Published : 30 Jul 2021 03:15 AM
Last Updated : 30 Jul 2021 03:15 AM

ரேஷன் கார்டுக்கு அலையும் குன்றத்தூர் வட்டார மக்கள் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதிய ரேஷன் கார்டு பெறுதல்,பெயர் சேர்த்தல், நீக்கல், விலாசம்மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு பொது விநியோக இணையதளத்தில் விண்ணப்பித்து உரியஆவணங்களை பதிவேற்றம்செய்தாலும், விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்கள் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனர். இடைத்தரகர் மூலம் அணுகினால் மட்டுமே தீர்வு கிடைப்பதாகவும், குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ.5000 வரை கேட்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, “குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுக்காக உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தாலும் மனு நிராகரிக்கப்படுகிறது அல்லது நிலுவையில் வைக்கப்படுகிறது. அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரை சந்திக்கவே முடியவில்லை.

அதேசமயம், அவர்களின் ‘எதிர்பார்ப்பை' பூர்த்தி செய்தால்,உடனே கோரிக்கை நிறைவேறுகிறது. எனவே, அவர்கள் கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்ற கோரிக்கையை மக்கள் முன் வைக்கின்றனர்.

இதுகுறித்து குன்றத்தூர் வட்டாட்சியர் ஆர்.பிரியா கூறும்போது, “வட்ட வழங்கல் அலுவலர் மீது பலர் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலரை பலமுறை அழைத்து எச்சரித்து உள்ளோம். மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் பாபுவிடம் கேட்டபோது, “வட்ட வழங்கல் அலுவலரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை. இருந்தாலும் இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x