Published : 29 Jul 2021 03:12 am

Updated : 29 Jul 2021 03:12 am

 

Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு : பிரதமர் நரேந்திர மோடி, எடியூரப்பா உள்ளிட்டோர் வாழ்த்து

கர்நாடக ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த எளிய விழாவில், முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.- பிடிஐ

பெங்களூரு

கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக பசவராஜ் பொம்மை (61) நேற்று பதவியேற்றுக் கொண்டார். பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடந்த விழாவில் அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கர்நாடக முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பாவுக்கு 78 வயது நிறைவடைந்ததால் பாஜக மேலிட உத்தரவின்பேரில் கடந்த 26-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய எம்எல்ஏவை தேர்வு செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகனும் எடியூரப்பாவின் ஆதரவாளருமான பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.


அதை ஆளுநர் ஏற்றுக் கொண்டதை யடுத்து, புதன்கிழமை காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பசவராஜ் பொம்மை நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பெங்களூரு ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி, பாஜக மேலிட பொறுப்பாளர் அருண் சிங், முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோருடன் ஆளுநர் மாளிகைக்கு வந்தார்.

ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்ற விழாவில், முதல் வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட், பதவி பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பசவராஜ் பொம்மை, கடவுளின் பெயரால் பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஜெக‌தீஷ் ஷெட்டர், பாஜக மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

புதிய முதல்வருக்கு தர்மேந்திர பிர தான், எடியூரப்பா உள்ளிட்டோரும், அவ ரது குடும்பத்தினரும் பூங்கொத்துகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்துகள். சட்டப்பேரவையிலும் நிர் வாகத்திலும் நீண்ட அனுபவம் வாய்ந்த இவர் மிகவும் சிறப்பான முறையில் கடமையை செய்வார். கர்நாடகாவில் வியக்கத்தக்க பணிகளை மேற்கொள்வார் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

எடியூரப்பாவுக்கு பாராட்டு

பிரதமர் மோடி முன்னாள் முதல்வர் எடியூரப்பாவையும் பாராட்டி தனது ட்விட் டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பாஜகவின் நலனுக்காகவும் கர்நாடகாவின் வளர்ச்சிக் காகவும் பி.எஸ்.எடியூரப்பா செய்துள்ள இந்த மகத்தான தியாகத்தை வார்த்தை களால் விவரிக்க இயலாது. பல தலைமுறைகளாக கர்நாடகாவின் பல பகுதிகளுக்கும் சென்று கடுமையாக உழைத்து கட்சியை வளர்த்துள்ளார். எடியூரப்பா ஆற்றிய சமூக பணிகளுக்காக எப்போதும் போற்றப்படுவார்' என குறிப் பிட்டுள்ளார்.

தந்தை வழியில் முதல்வரான மகன்

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் (1988-‍ 89) மகனான பசவராஜ் பொம்மை, 1960 ஜனவரி 28-ம் தேதி வடகர்நாடகாவில் உள்ள ஹாவேரியில் பிறந்தார். பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்த இவர், புனேவில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றினார். ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தனது தந்தையை பார்த்து அரசியலில் ஆர்வம் காட்டினார். இதையடுத்து ஜனதா தளம் கட்சியில் இணைந்து இளைஞர் அணியை வலுப்படுத்தினார். பின்னர் ஜனதா தளம் கட்சி சார்பில் முதல்வர்களாக பதவி வகித்த ராமகிருஷ்ண ஹெக்டே, ஜே.ஹெச்.படேல், தேவகவுடா ஆகியோருக்கு அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

கடந்த 2008-ல் ஜனதா கட்சியில் இருந்து விலகி எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். லிங்காயத்து வகுப்பைச் சேர்ந்த இவர், எடியூரப்பாவுக்கு நெருக்கமானவராக மாறினார். 2 முறை சட்டமேலவை உறுப்பினராகவும், 3 முறை ஷிகான் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். 2008-13 காலகட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சராகயும், 2019-21 காலகட்டத்தில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

கர்நாடகாவில் ஏற்கெனவே முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் மகன் குமாரசாமி இருமுறை முதல்வராக இருந்துள்ளார். அந்த வரிசையில் இரண்டாவதாக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன் பசவராஜ் பொம்மை முதல்வராகியுள்ளார். அதிலும் பாஜகவுக்கு வெளியே இருந்து வந்து, முதல்வராகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பசவராஜ் பொம்மை முதல்வராக பொறுப்பேற்றுள்ளதால் லிங்காயத்து வகுப்பினரும் வடக‌ர்நாடகாவை சேர்ந்தவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x