Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

நூற்றாண்டு கண்ட முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் - சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்' விருது : ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவுக்கு இந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘தகைசால் தமிழர்' விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றிய வர்களை பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார். இந்த விருதுக்கான விருதாளரை தேர்வு செய்ய முதல்வர் தலைமை யில் தொழில் துறை, ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர்கள், தலைமைச் செயலரை உள்ளடக்கிய குழுவை அமைக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசு உரு வாக்கியுள்ள ‘தகைசால் தமிழர்’ விருது, முதல் நபராக மூத்த கம்யூனிஸ்ட் தலை வர் என்.சங்கரய்யாவுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச் சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழர்’ விருதை உருவாக்கவும், இதற் கான விருதாளரைத் தேர்வு செய்ய குழுவை அமைக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தா லோசனை கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

இளம் வயதிலேயே பொது வாழ்க் கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராக வும், சுதந்திரப் போராளியாகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும் அரும்பணி யாற்றியதுடன், தமிழகத்துக்கும் தமிழினத் தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வரும் ஆகஸ்ட் 15 -ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்படும்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யில் 1922-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்த சங்கரய்யா, மாணவர் பருவத்தி லேயே கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது மாணவர் சங்கம் மூலம் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆங்கிலேயே அரசை எதிர்த்ததால் 4 ஆண்டுகள் சிறை யில் இருந்தார். விடுதலைக்குப் பிறகு மக்கள் நலனுக்காக போராடி 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர். 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்.

மதுரை மேற்கு, மதுரை கிழக்கு தொகுதிகளில் இருந்து தமிழக சட்டப் பேரவைக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப் பட்டவர். 80 ஆண்டுகளாக பொதுவாழ்க் கையில் இருக்கும் சங்கரய்யா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பல ஆண்டுகள் பணி யாற்றியவர். கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

கடந்த 15-ம் தேதி சங்கரய்யாவின் 100-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலை வர்கள் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நூற்றாண்டு கண்டுள்ள அவருக்கு தமிழக அரசு புதிதாக உருவாக்கியுள்ள 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள் வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்ட அறிக்கையில், ‘முதுபெரும் கம் யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. சங்கரய்யாவுக்கு இந்த விருதை தமிழக அரசு வழங்கியிருப்பதன் மூலம் அவரைப் போன்று மக்கள் சேவையில் தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனைகளை இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்துவதாக அமையும்’ என்று தெரிவித்துள்ளார்.

‘தகைசால் தமிழர்’ விருது பெற்றுள்ள சங்கரய்யாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விருதை வழங்கிய தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரி வித்துள்ளனர்.

கரோனா நிவாரண நிதிக்கு…

விருது தொடர்பாக சங்கரய்யா நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதை இந்த ஆண்டு எனக்கு வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதை அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. இந்த விருதுக்காக அளிக்கப்படும் ரூ.10 லட்சத்தை முதல்வரின் கரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன்.

மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழக மக்களின் நலனுக்கும், இந்திய நாட்டின் விடுதலைக்கும், உழைக்கும் மக்களின் நலன் காத்திடவும் என்னால் முடிந்த அளவு பணியாற்றியுள்ளேன். சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக்கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x