Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி சந்திப்பு : தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தியதாக தகவல்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக ஒருங்கிணைப் பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர். தமிழகத்துக்கான தடுப் பூசி, மேகேதாட்டு அணை, கோதா வரி - காவிரி இணைப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாக பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி யில் இருந்த அதிமுக தோல்வி யைத் தழுவியது. ஆனாலும், 65 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. சமீபத் தில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது மத்திய இணை அமைச்சராகி யுள்ளார். இவர் 6 மாதங்களுக்குள் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் 3 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. 3 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஒரு இடம் அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, அந்த இடத்தை பாஜகவுக்கு அதிமுக விட்டுத் தரலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் காலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அன்று இரவே கோவையில் இருந்து அதிமுக இணை ஒருங்கிணைப் பாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் டெல்லி சென்றனர்.

பிரதமர் மோடியை நாடாளு மன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிமுக ஒருங் கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல் வம், பழனிசாமி ஆகியோர் நேற்று காலை சந்தித்துப் பேசினர். அப் போது, தமிழக அரசியல் நிலவரம், சசிகலா விவகாரம் உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் குறித்து ஆலோ சித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது எம்.பி.க்கள், மு.தம்பிதுரை, ஓ.பி.ரவீந்திரநாத் குமார், முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது:

சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தோம். தமிழகத்துக்கு தேவையான அளவுக்கு தடுப்பூசியை வழங்கவும் வலியுறுத்தியுள்ளோம்.

கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்ட மத்திய அரசு உதவக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளை விரைவாக செயல்படுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினோம்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் கட்சியில் இருந்து விலகிச் செல்கின்றனர். தொண்டர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை. அதிமுக கட்டுக்கோப்பான இயக்கம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்யும் இயக்கம் அதிமுக. அதனடிப்படையில், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு தேவையான நன்மைகளை பிரதமரிடம் வலியறுத்தியுள்ளோம்.

தமிழக அரசு லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டேன். இது நான் கற்பனையுடன் வெளியிட்ட அறிக்கை அல்ல. கிடைத்த தகவலின்பேரில் வெளியிட்டது. லாட்டரி சீட்டை கொண்டுவரவில்லை என்றால் நல்லதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா விவகாரம் மற்றும் ஒற்றை தலைமை குறித்த செய்தியாளர்களின் கேள்விகளை ஓபிஎஸ், பழனிசாமி இருவருமே தவிர்த்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x