Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

வரலாறு காணாத பெருமழை - மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் 36 பேர் உயிரிழப்பு : ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் தீவிரம்

மகாராஷ்டிராவின் ஏற்பட்ட நிலச்சரிவால் 36 பேர் உயிரிழந் துள்ளனர்.

தென்மேற்குப் பருவமழை மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாவே தீவிரமடைந்துள்ளது. விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் மகாராஷ்டிராவில் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணப்புப் படையினர், போலீஸார், விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏறக்குறைய 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகமழை கொட்டித் தீர்த்து வருவதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ராய்காட் மாவட்டம், மகாத் பகுதியில் பெய்ந்த கனமழையால் மலைப்பகுதியான தெலி கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்தகிராமத்தில் உள்ள ஏராளமானவீடுகளும், அதில் குடியிருந்தவர் களும் மண்ணில் புதைந்தனர்.

இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட கிராமத்துக்குப் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண்ணில் புதையுண்டவர்களில் இதுவரை 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

கடற்படையின் 2 குழுக்கள், மாநில மீட்புப் படையின் 12 குழுக்கள், கடலோரப் படையின் 2 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் 3 குழுக்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ரத்னகிரி மாவட்டத்திலும் பெய்ததொடர் மழையால், வஷிஸ்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். செல்போன் டவர்களும் செயல் இழந்துள்ளன. வெளியுலகிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்னகிரி பகுதிகள் உள்ளன.

அடுத்த 3 நாட்களுக்கும் மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்து இருப்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் பேட்டி

முதல்வர் உத்தவ் தாக்கரே கூறும்போது, “தெலி கிராமத்தில் நிலச்சரிவில் 36 பேர் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசின் நிவாரண முகாம்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு அதிகாரிகள் செய்வார்கள்” என்றார்.

பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. ரத்னகிரி மாவட்ட கடலோர பகுதியான சிப்லுன் பகுதியில் 12 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்துள்ளன. மேலும் கடந்த 24 மணி நேரமாக அங்கு இடைவிடாது கனமழை பெய்துள்ளது. இதனால் வஷிஸ்டி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x