Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி - தமிழகம் முழுவதும் அதிமுக 28-ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் : வீடுகளின் முன்பு முழக்கம் எழுப்ப ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தல்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அரசின் மெத்தனப் போக்கை களையவும் வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தங்கள் வீடுகள்முன்பு பதாகைகள் ஏந்தி கவனஈர்ப்பு முழக்கங்களை எழுப்புவார்கள் என்று அக்கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:

சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், தங்கை கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றுபிரச்சாரம் செய்தனர். நீட் தேர்வை ரத்து செய்யும் சூத்திரம் தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று சத்தியம் செய்தனர். இதை நம்பி தமிழக வாக்காளர்கள் வாக்களித்தனர். சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள திமுக, இப்போது நீட் தேர்வு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்வுக்கு தயாராகுமாறு மாணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கு இதன்மூலம் நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டுள்ளது.

தங்களுக்கு மட்டுமே தெரிந்தவல்லமை, சூத்திரத்தை பயன்படுத்தி நீட்தேர்வை ரத்து செய்யவேண்டும் என தமிழக மாணவர்கள், பெற்றோர் சார்பில் தமிழக அரசை அதிமுக கேட்டுக் கொள்கிறது.

திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மக்கள் அடிப்படை தேவைக்கான பொருட்கள், கட்டுமான பொருட்கள் விலை உயர்வது வாடிக்கை ஆகிவிட்டது. பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.4 குறைப்பதாகவும், எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருவதாகவும் வாக்களித்த திமுக, இதுவரை அதுபற்றி வாய் திறக்காமல் உள்ளது. பெண்களுக்கு அளித்தவாக்குறுதிகளை நிறைவேற்றுவதே நாணயமான செயல்.

விவசாயிகளுக்கு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட எண்ணற்ற வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட இதுவரை நிறைவேற்றவில்லை. மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே பெரிய அணையை கர்நாடகா கட்டியுள்ளது. அதுகுறித்து திமுகவாய்திறக்க மறுக்கிறது. மேகேதாட்டு அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில் இப்போதாவது திமுக அரசு விழிப்புடன் செயல்பட்டு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் மலிவான அரசியல் ஆயுதத்தை திமுக அரசு கையில் எடுத்துள்ளது. அதிமுகவை அழித்துவிடலாம் என்ற கனவு பகல் கனவாக முடியும். எனவே, நேர்மையாகவும், திறமையாகவும் ஆட்சி செய்ய திமுக முன்வர வேண்டும்.

திமுக அரசின் மெத்தனப்போக்கை களையவும், அக்கறையுடன் மக்கள் குரலுக்கு செவி சாய்க்கவும் வலியுறுத்தி வரும்28-ம் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகியபகுதிகளில் அதிமுக தொண்டர்கள் தங்கள் வீடுகளின் முன்பு பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்ப வேண்டும்.அது தமிழக மக்களின் குரல்களாக ஒலிக்க வேண்டும். கரோனாதடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி குரல் எழுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x