Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

2-வது விமானநிலைய பணியை தொடங்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை 2-வது விமான நிலையத் திட்டம் அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதற்கான அடிப்படை பணிகள் கூட இன்னும் நிறைவடையவில்லை. சென்னையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட கொச்சி, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பே திறக்கப்பட்டு விட்டன. விசாகப்பட்டினம் 2-வது விமானநிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.

2008-ம் ஆண்டில் தொடங்கி இன்று வரையிலான 13 ஆண்டுகளில் பெரும்புதூர், திருப்போரூர், வல்லத்தூர், செய்யார், மதுரமங்கலம், தொடூர், மப்பேடு, மாமண்டூர், பரந்தூர் என பல இடங்கள் அடையாளம் கண்டு ஆய்வு செய்யப்பட்டாலும், இன்றுவரை எந்த இடமும் இறுதி செய்யப்படாதது தான் பணிகள் தொடங்கப்படாததற்கு காரணம்.

சென்னை விமானநிலையம் புதிய முனையங்களுடன் விரிவாக்கப்பட்டாலும் கூட, அது அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அதற்குள்ளாக சென்னை விமானநிலையம் மூலம் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 3.5 கோடியைக் கடந்து விடும்.

அதனால் அடுத்த 6 ஆண்டுகளுக்குள் புதிய விமானநிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

இதை மனதில் கொண்டு சென்னையில் 2-வது விமானநிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு உடனடியாக இறுதி செய்ய வேண்டும்.

மத்திய அரசும் விரைவாக கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். இப்பணிகளை விரைவுபடுத்த தமிழக அரசு, மத்திய அரசு, விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x