Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு - தினசரி 600 லாரிகளில் கடத்தப்படும் கனிம வளங்கள் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினசரி 600-க்கும் மேற்பட்டடாரஸ் லாரிகளில் கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியலில் தொடங்கி ஆரல்வாய்மொழி வரை மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதிகளில் கடந்த 2013-ம் ஆண்டு வரை நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வந்தன. அதன்பின், மேற்குதொடர்ச்சி மலையை பாதுகாக்கும் வகையில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் அனுமதியுடன் சில குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், சிலர் கனிம வளங்களை தாராளமாக வெட்டிஎடுத்து, டாரஸ் லாரிகளில்பலமடங்கு பாரம் ஏற்றப்பட்டு கல், ஜல்லி, பாறை பொடி ஆகியவற்றை கேரளாவுக்கு கொண்டு செல்கின்றனர். சுங்காங்கடை, குலசேகரம், அருமனை, ஆரல்வாய்மொழி போன்ற பகுதிகளில் இருந்து 24 மணி நேரமும் கனிமவளங்கள் கேரளா கொண்டு செல்லப்படுகின்றன.

களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரத்தில் மட்டும் 49 லாரிகள் கல் பாரம் ஏற்றிச் செல்கின்றன. நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் கல், ஜல்லி கொண்டு செல்லப்படுகிறது. இதுதவிர, காக்காவிளை, நெட்டா போன்ற பிற வழிகளிலும் கல் பாரம் ஏற்றிய நூற்றுக்கணக்கான லாரிகள் கேரளாவுக்கு பயணிக்கின்றன.

கனிமவளத் துறையிடம் இருந்துகேரளாவுக்கு 50 லாரிகளில் கனிமவளம் கொண்டு செல்வதாக பாஸ்பெற்றுவிட்டு, 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் கடத்திச் செல்லப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக 8 யூனிட் வரை டாரஸ் லாரிகளில் கல் பாரம் ஏற்றிச் செல்வதால் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் சேதமாகிவிட்டன. மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் கேரளாவுக்கு அனுமதியின்றி கனிமவளங்கள் கொண்டு சென்றதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்து, ரூ.40 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

ஆனால், “இதெல்லாம் பெயரளவுக்குதான். தினமும் 600-க்கும்மேற்பட்ட டாரஸ் லாரிகளில் அனுமதியின்றி கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுகின்றன. அரசியல் தலையீடு, அதிகாரிகள் சிபாரிசு போன்றவற்றால் கனிமவள கடத்தல் தொடர்கிறது” என மேற்குதொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கனிமவள கொள்ளையை தடுக்கக் கோரி நீதிமன்றத்தில் பல வழக்குகளை தொடர்ந்த, ‘பாசனத்துறை’ அமைப்பின் தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறியதாவது:

அதிகாரிகள் உடந்தை

கேரளாவிலும் கல்குவாரிகள் உள்ளன. ஆனால், அவை முறையாக கட்டுப்பாடுடன் செயல்படுகின்றன. இதனால், அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் வளத்தை சுரண்டி வருகின்றனர். இதற்கு இங்குள்ள அதிகாரிகளும், சுயநலவாதிகளும் உடந்தையாக உள்ளனர்.

சொந்த நிலத்தில் ஒரு சர்வேஎண்ணில் கல்குவாரிக்கான நிலத்தை காட்டிவிட்டு, அரசுஇடத்தில் உள்ள மலையடி வாரங்களில் கனிமவளத்தை சுரண்டுகின்றனர். கனிமவளச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்போன்றவற்றின்படி குமரியில்சிறு குன்றுகளில் கூட கற்களைஉடைக்க முடியாது.

தரைமட்டத்தில் காணப்படும் பாறைகளில் மட்டுமே விதிகளின்படி கற்களை எடுக்கலாம். கோடிக்கணக்கில் பணம் கிடைப்பதால் விதிமுறைக்கு புறம்பாக கல், ஜல்லி, பாறைப்பொடிகள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. இதை வரன்முறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x