Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

உயர் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் - ஹெச்.ராஜா முன்ஜாமீன் மனு தள்ளுபடி : திருமயம் நீதிமன்றத்தில் ஜூலை 23-ல் ஆஜராக உத்தரவு

உயர் நீதிமன்றம், காவல்துறையை அவதூறாகப் பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், திருமயம் நீதிமன்றத்தில் ஜூலை23-ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 2018 செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மேடை அமைக்க, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை அனுமதி மறுத்தது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, நீதிமன்றம் மற்றும் காவல்துறையை விமர்சனம் செய்தார். இது தொடர்பாக ஹெச்.ராஜா மீது திருமயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 3 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில் உயர் நீதிமன்றத்தில் துரைசாமி நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து திருமயம் நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் ஹெச்.ராஜா தலைமறைவாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில்முன்ஜாமீன் கேட்டு ஹெச்.ராஜாஉயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கில் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வருத்தம்தெரிவித்துள்ளேன். இருப்பினும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமயம் நீதிமன்றத்தில் வழக்குவிசாரணைக்காக ஜூலை 23-ல்நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் என்னைக் கைது செய்ய வாய்ப்புள்ளது. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என ராஜா கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.பின்னர் நீதிபதி, மனுதாரர் நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியுள்ளார். இதனால் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன்தான் அனுப்பி உள்ளது.அதையேற்று மனுதாரர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x