Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

மற்றவர்கள் மீது பழி சுமத்த வேண்டாம் - தடுப்பூசி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தல்

கரோனா தடுப்பூசி விஷயத்தில் மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்துவதை தவிர்த்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும். தடுப்பூசி தொடர்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சிக்கு வந்ததுமே, உலகளாவிய டெண்டர் விடப்பட்டு, கரோனா தடுப்பு மருந்து கொள்முதல் செய்யப்பட்டு, மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றது. மேலும், செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்புநோய் மருந்து தயாரிப்பு மையத்தை மாநில அரசே ஏற்று நடத்தும் என்றும்; அங்கு தடுப்பூசி அதிக அளவில் தயாரிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தது.

அந்த முயற்சி பயனளிக்காத நிலையில், தமிழக அரசே வெளிச்சந்தையில் தடுப்பு மருந்துகளை வாங்கி பொதுமக்களுக்கு அளிக்கும் என்று கூறியது. இப்படி மக்களிடையே பொய்யான வாக்குறுதிகள் அளித்ததை தவிர வேறு எதையும் அரசு செய்யவில்லை.

2 நாட்கள் முன் 30 லட்சம் டோஸ்தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பியதாக செய்தி வந்த நிலையில், அவை முறையாக மக்களுக்கு செலுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்துவதை கைவிட்டு, மக்களை காக்கும் பணியில் அரசு ஈடுபட வேண்டும். மத்திய அரசால் கடந்த2 மாதங்களில் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டன, அவை எத்தனை பேருக்கு போடப்பட்டது. 2-ம் தவணை தடுப்பூசி எத்தனைபேருக்கு போட வேண்டும், மத்தியஅரசிடம் இருந்து வரும் தடுப்பூசிகள் மாவட்டங்கள் தோறும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பவை பற்றி தமிழக அரசுவெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் பதில்

இதுகுறித்து சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “தடுப்பூசி குறித்த அனைத்து விவரங்களும் தினமும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சிதலைவர் எதையும் பார்க்காமல் மீண்டும் வெள்ளை அறிக்கை கேட்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடரில் வெள்ளை பேப்பரில் எழுதி அவரிடம் கொடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x