Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல் செய்யப்பட்டு - 75 ஆண்டு ஆன பிறகும் தேச துரோக சட்டம் தேவையா? : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல் செய்யப்பட்ட தேச துரோக சட்டம் தேவையா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்போரை கைது செய்ய இந்திய தண்டனை சட்டம் 124ஏ (தேச துரோக சட்டம்) கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்து ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.வொம்பாட்கெரே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் மீது தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மக்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. கடந்த 1962-ம் ஆண்டில் கேதார்நாத் சிங் வழக்கின் தீர்ப்பில் இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ பிரிவு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

'எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா' சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

'எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா' சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவாண் ஆஜராகி வாதாடி னார். "இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரினார்.

அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியதாவது:

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை பயன்படுத்தி மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சுதந்திர போராட்டத்தை ஒடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்திய தண்டனை சட்டம் 124ஏ பிரிவின் வரலாற்றை திரும்பி பார்த்தால், பல முறை தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடியும். ஒரு போலீஸ் அதிகாரி நினைத்தால் யார் மீது வேண்டுமானாலும் இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும் நிலை உள்ளது.

இந்தியா விடுதலையடைந்த பிறகு ஆங்கிலேயர் கால பழைய சட்டங்கள் சில நீக்கப்பட்டன. சில சட்டங்கள் திருத்தப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட இந்த சட்டத்தை மட்டும் இதுவரை பரிசீலிக்காதது ஏன்? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த சட்டம் தேவையா? இவ்வாறு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறும்போது, "இந்த சட்டத்தை ரத்து செய்யாமல் சட்டத்தை முறையாக அமல்படுத்த வழிகாட்டுதல்களை வகுக்கலாம்" என்று தெரிவித்தார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, "இவ்வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு நீதி மன்றத்தின் பணி எளிதாகி விடும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தலைமை நீதிபதி ரமணா கூறும்போது, "இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ பிரிவை எதிர்க்கும் அனைத்து மனுக்களும் ஒன்றாக விசாரிக்கப்படும். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி எஸ்.ஜி.வொம்பாட்கெரே நாட்டுக்காக சேவையாற்றியவர். அவர் உள்நோக்கத்துடன் வழக்கு தாக்கல் செய்திருக்க வாய்ப்பில்லை. அவரது மனு குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x