Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

மக்களின் பாதுகாப்பான பயணத்துக்கு சாலை கட்டமைப்பை மேம்படுத்துங்கள் : நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

மக்களின் பாதுகாப்பான பயணம், சரக்குகளை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச்செல்ல சாலை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகள், 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், புதிய சாலைகள் அமைத்தல், அகலப்படுத்துதல், உறுதிப்படுத்துதல், புதுப்பித்தல், பராமரித்தல், புறவழிச்சாலை, சுற்றுச்சாலை அமைத்தல், புதிய பாலங்களைக் கட்டுதல், பழைய பாலங்களைச் சீரமைத்தல், உயர்மட்டப்பாலம் கட்டுதல், ரயில்வே கடவுக்குபதில் சாலை மேம்பாலம், கீழ்ப்பாலம் கட்டுதல், சாலை சந்திப்புகள், குறுகிய வளைவுகளை மேம்படுத்துதல், சாலை பாதுகாப்புப் பணிகள், சாலை இருபுறங்களிலும் மரக்கன்றுகளை வளர்த்தல் போன்ற திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

மேலும், நெடுஞ்சாலைத் துறை யில் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள், மத்திய அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்படும் பணிகளான உயர்மட்டசாலைகள் அமைத்தல், புறவழிச்சாலைகள் அமைத்தல், அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகுறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கடல்சார் வாரியத்தின் பணிகளான துறைமுகங்கள் நிர்வகித்தல், கட்டுப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை செய்தல், சிறு துறைமுகங்களில் சரக்குகளை கையாளுதல், பயணிகள் படகு போக்குவரத்து, கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தர் பாறையில் படகுத்தோணித் துறை நீட்டிப்பு குறித்தும், தமிழ்நாடு கடல்சார் வாரியம், பூம்புகார் கப்பல்போக்குவரத்துக் கழக செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘தமிழகத்தில் உள்ளஅனைத்து பகுதிகளிலும் சாலைப் போக்குவரத்தில் மக்களின் பாதுகாப்பான பயணத்துக்கும், சரக்குகளை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் வகையிலும் சாலை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் கீழ் வருங்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை முறையாக திட்டமிட்டு விரைவாக முடிக்க வேண்டும். சாலைப் பணிகளின் போது இதர துறைகளுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு இடையூறின்றி மேற்கொள்ள வேண்டும்’’ என்றும் அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை செயலர் தீரஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x