Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

தொலைக்காட்சி விவாதத்தில் அதிமுக இனி பங்கேற்காது : ஓபிஎஸ், பழனிசாமி அறிவிப்பு

தொலைக்காட்சி, சமூக ஊடக விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது என்று ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மக்களின் அடிப்படைத் தேவைகள், தினசரி பிரச்சினைகள் பல இருக்கும்போது, அவற்றைப் பற்றி கவலைப்படாமல் ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்கும் ஊடக நிறுவனங்கள், அதிமுகவின் புகழுக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் நோக்கிலும், மனம்போன போக்கில் ஊடக அறத்துக்குப் புறம்பாகவும், கழகத் தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் விவாதத் தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை, தொடர்ந்து நடத்துவது மன வருத்தம், வேதனையை அளிக்கிறது.

இந்த காரணங்களால், ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில், நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, அதிமுகவைச் சேர்ந்தவர்களோ யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள். எங்களை பிரதிநிதிப்படுத்துவதாக கூறிக்கொண்டு யாரையும் வைத்து பேசுவதை நிறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

எனவே, அதிமுகவின் பெயரை எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடகம் வழியாக கருத்துகளைத் தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம். வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் பலமுறை பாஜகவும் ஊடக விவாதத்தில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்துள்ளது. தற்போதும்கூட ஊடக விவாதத்தில் பாஜக பங்கேற்பது இல்லை. அதுபோல, திமுகவும் குறிப்பிட்ட தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்பதை தவிர்த்து வந்தது.

மேலும், சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்பு, பாஜக பங்கேற்கும் விவாதத்தில் திமுக பங்கேற்பதை தவிர்த்து, அதன்பிறகு முடிவை மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x