Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

தருமபுரி - ஓசூர் 4 வழிச்சாலை ஓரமாக எரிவாயு குழாய்கள் பதிக்க வேண்டும் : கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

விளைநிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி

விளைநிலங்களை தவிர்த்து, தருமபுரி - ஓசூர் 4 வழிச்சாலை ஓரமாக எரிவாயு குழாய்கள் பதிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் தலைமையில் விவசாயிகள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப் பதாவது:

கெயில் நிறுவனம், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து, பெங்களூருவுக்கு, தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை செயல் படுத்த, கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து கடும் முயற்சி எடுத்து வருகிறது.

பாதிக்கப்பட்ட 7 மாவட்ட விவசாயிகள், ஒருங்கிணைந்து போராடியதன் விளைவாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சாலையோரமாகத்தான் திட் டத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் விவசாயிகளை மிரட்டி, அச்சுறுத்தி கெயில் நிறுவனம் குழாய் அமைக்க தொடங்கியது. அப்போது மறு உத்தரவு வரும் வரை திட்டப்பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், பாதிக்கப் பட்டவர்களையும், உழவர்கள் சங்கத்தினரையும் கலந்து கொள்ளாமல் திட்டப்பணிகள் எந்த விதத்திலும் தொடங்கப்படாது என ஆட்சியர் உறுதியளித்தார்.

இதன் பின்னர் தற்போது கெயில் நிறுவனம் மாவட்ட ஆட்சியர் திட்ட பணிகளை தொடங்க உத்தரவிட்டதாக சொல்லி, மீண்டும் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் குழிகளை மூடி உள்ளது.

இந்நிலையில், இந்நிறுவனம் விளை நிலங்களில் இருந்து குழாய்களை அகற்றுவதற்கு பதிலாக திட்டத்தை நிறைவேற்றும் விதமாக குழிகளை மூடுவது உழவர்களின் வாழ்வாதாரத்தை மிகக்கடுமையாக பாதிக்கும். எனவே மாவட்ட ஆட்சியர், விளைநிலங்களில் இருந்து குழாய்களை அகற்றவும், திட்டத்தை புதிதாக அமைக்கப்படவுள்ள தருமபுரி - ஓசூர் 4 வழிச்சாலை ஓரமாக அமைக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x