Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM

போலி கால்நடை மருத்துவர்கள் மீது நடவடிக்கை : தருமபுரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் போலி கால்நடை மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கால்நடைகளுக்கு, ‘கால்நடை மருத்துவ பேரவை’ எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் பெற்றவர்கள்.

போலி கால்நடை மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும்போது ஏற்படும் குறைபாடு மற்றும் இழப்பீடுகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது. தருமபுரி மாவட்டத்தில் சில இடங்களில் கால்நடைகளுக்கு சினை ஊசி போட பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் தங்களை கால்நடை மருத்துவர் என கூறிக் கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சைகளும் அளிக்கின்றனர். இது தவறான செயல். செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் மாடுகளுக்கு சினை ஊசி போட மட்டுமே 3 மாத காலம் பயிற்சி பெறுகின்றனர். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள், அதற்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் அவர்கள் பெறுவதில்லை. எனவே, கால்நடைகளின் உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட(பதிவு பெற்ற )மருத்துவர்களை மட்டுமே மக்கள் அணுக வேண்டும். மேலும், போலி கால்நடை மருத்துவர் குறித்து மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநரிடம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். போலி கால்நடை மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் முதல் முறை ரூ.1000-ம், இரண்டாம் முறை ரூ.1000 அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனையும் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x