Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

பள்ளத்தில் சிக்கிய ஆவின் பால் டேங்கர் லாரி :

வேலூர்: வேலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் சீரமைக்கப்படாத சாலை பள்ளத்தில் சிக்கிய ஆவின் பால் டேங்கர் லாரி இரண்டு மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.

வேலூர் சத்துவாச்சாரியில் ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்டு சென்னை ஆவினுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் பால் பாக்கெட்டுகள் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து சுமார் 15 ஆயிரம் லிட்டர் பால் டேங்கர் லாரி மூலம் நேற்று அதிகாலை அனுப்பப்பட்டது. இந்த லாரி வேலூர் நீதிமன்ற வளாகம் மற்றும் வேலூர் ஆவின் தலைமையகம் இடையிலான சாலையில் சென்றபோது பாதாள சாக்கடைத் திட்டத்தில் சீரமைக்கப்படாத பள்ளத்தில் சிக்கியது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், கிரேன் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு பள்ளத்தில் சிக்கிய பால் டேங்கர் லாரி பத்திரமாக மீட்கப்பட்டது.

வேலூர் மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான சாலைகள் முறையாக சீரமைக்கவில்லை. போதிய திட்டமிடல் இல்லாமல் பணிகளை மேற்கொண்டு வருவதால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இது தொடர்பான புகார்களுக்கு மநாகராட்சி அதிகாரிகள் பெரியளவில் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x