Published : 08 Jul 2021 03:12 AM
Last Updated : 08 Jul 2021 03:12 AM

ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் - தமிழ்த் துறை தொடர்ந்து இயங்க ரூ.1.25 கோடி நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை

ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தொடர்ந்து, தொய்வின்றி இயங்க ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் மொழியின் வளர்ச்சியில், ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்ப்பிரிவும் முக்கியப் பங்காற்றிவருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியல் ஆய்வு நிறுவனம் 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

நிதி பற்றாக்குறை

கடந்த 2014-ம் ஆண்டு கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு உருவான நிதிப்பற்றாக்குறையால், அங்கு பணிபுரிந்த தமிழ்ப் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ் 2020, செப்டம்பரில் ஓய்வுபெற்ற பின், தமிழ்ப்பிரிவை மூடுவதாக அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.

அதேநேரம், அமெரிக்கவாழ் இந்தியர்கள் தமிழ்த் துறை தொடர்ந்து இயங்குவதற்குத் தேவையான நிதியில் பாதியைத்திரட்டி கொலோன் பல்கலைக்கழகத்துக்கு அளித்ததால், தமிழ்ப்பிரிவை மூடும் முடிவு 2022-ம் ஆண்டு ஜூன் வரை ஒத்திவைக்கப்பட்டது.

முந்தைய அரசு அறிவிப்பு

இதற்கிடையே, கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு தேவையான நிதியில் ரூ.1 கோடியே25 லட்சத்தை, 2019-ல் தமிழக அரசுசார்பில் முந்தைய ஆட்சியாளர்கள் அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதை உடனடியாக வழங்க வேண்டும் என்று அப்போதைய எதிர்கட்சித் தலைவராகஇருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இருப்பினும், அத்தொகை விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை தொடர்ந்து, தொய்வின்றி இயங்க ஏதுவாக, தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதியை உடனடியாக கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

தமிழக அரசு துணை நிற்கும்

கருணாநிதி வழியில் செயல்பட்டுவரும் இந்த அரசு, இப்படிப்பட்ட திட்டங்களுக்கு நிதியுதவி செய்து, கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை இன்னும் 2 ஆண்டுகளில் 60 ஆண்டுகளைக் காணும்நல்வாய்ப்புக்கு உதவும் என்பதோடு, தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை உலகள வில் பரவ என்றென்றும் துணை நிற்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு உடனடி நடவடிக்கை

ஆர்.ஷபிமுன்னா

‘நிதி பற்றாக்குறையால் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையை செப்டம்பர் முதல் மூடிவிட அதன் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக’ நேற்றைய ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் தமிழக அரசு நிதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் ஐரோப்பியக் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகியும், மூன்சென் நகர தமிழ் சங்கத்தின் தலைவருமான பி.செல்வகுமார் தொலைபேசியில் கூறும்போது, ‘‘இந்து தமிழ் திசை’யின் செய்தியைப் பார்த்து, உடனடியாக ரூ.1.25 கோடியை வழங்கி கொலோன் தமிழ்த் துறையை தொடர்ந்து இயங்க வழிவகை செய்த தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பில் நன்றி. தமிழின் வளர்ச்சிக்கான ‘இந்து தமிழ் திசை’யின் தொடர் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது’’ என தெரிவித்தார்.

இதனிடையே, ‘இந்து தமிழ் திசை’ செய்தியின் தாக்கமாக மத்திய கல்வித் துறை அமைச்சகம் சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது நிர்வாகத்தின் கீழ் செயல்படும், சென்னையில் அமைந்துள்ள மத்திய செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதில், கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு எந்த வகையில் மத்திய அரசு உதவ முடியும் எனக் கருத்து கேட்டிருப்பதாகவும் மத்திய கல்வித் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x