Published : 27 Jun 2021 03:12 AM
Last Updated : 27 Jun 2021 03:12 AM

அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள - கிரானைட் குவாரிகளை பொது ஏலத்துக்கு விட வேண்டும் : அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்

சென்னை

அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதிவாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனடியாக பொது ஏலத்துக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் உத்தரவுப்படி புவியியல் மற்றும் சுரங்கத் துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம், தமிழ்நாடுமேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் பணி ஆய்வுக் கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் இந்த நிதியாண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதம் வரையில் கனிம வருவாய் ரூ.161 கோடி.இனி வரும் மாதங்களில் அதிக வருவாய் ஈட்ட வேண்டும். தருமபுரி,மதுரை, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் இதரமாவட்டங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் தகுதிவாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனடியாக பொது ஏலத்துக்கு கொண்டு வந்து, அரசுக்கு மேலும் வருவாய் ஈட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்டல பறக்கும் படையினர்முனைப்புடன் செயல்பட்டு, அதிகஅளவில் வாகனங்களை கைப்பற்றி கனிம திருட்டை முற்றிலும் தடுத்து மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தர வேண்டும். உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளை கண்டறிந்தவுடன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட மற்றும் மண்டல பறக்கும் படை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டியெடுப்பது தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன், அப்பகுதிகளை களஆய்வு மேற்கொண்டு, தேவைப்பட்டால் ஆளில்லா விமான தொழில்நுட்பம் மூலம் அளவீடு செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மகி மண்டலம், ரெண்டாடி, கொடக்கல் ஆகிய கிராமங்களில் கருப்பு கிரானைட் குவாரி பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். புதிய கனிம வள பகுதிகளைக் கண்டறிந்து அவற்றுக்கு சுரங்க குத்தகையை தரவும், அதை லாபகரமாக சந்தைப்படுத்தவும் அலுவலர்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் 238 ஏக்கர்பரப்பளவில் செயல்பட்டு வரும்மேக்னசைட் சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்படும் கச்சா மேக்னசைட் முழுவதும் சுழற்சூளைப் பிரிவு மற்றும் நிலைச்சூளைப் பிரிவு ஆகிய இரு தொழிற்சாலைகளில் பல்வேறு தரங்களாக முழு எரியூட்டப்பட்ட மேக்னசைட், மித எரியூட்டப்பட்ட மேக்னசைட் பொருட்களாகதயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

செயல்படாமல் இருக்கும் மற்றொரு தொழிற்சாலையை சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அமைச்சர்துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x