Published : 26 Jun 2021 03:11 AM
Last Updated : 26 Jun 2021 03:11 AM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்போல் இனிமேல் நடைபெறக் கூடாது : உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்போல் இனிமேல் நடைபெறக் கூடாது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி 2018-ல் பொதுமக்கள் பேரணி சென்றபோது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு தூத்துக்குடிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து, 2018 செப்டம்பர் மாதம் தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையை ஏற்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் 2018 அக்டோபரில் முடித்து வைத்துஉத்தரவிட்டது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணை குறித்து ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதிசஞ்சிப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆயுதம் இல்லாமல் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது. நாகரிகமான சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்புடையது அல்ல.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் அதன் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த அறிக்கையையும், அப்போது தலைமைச் செயலர்தாக்கல் செய்த அறிக்கையையும் மூடி முத்திரையிட்ட கவரில்வைத்து நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும். இந்த மனுதொடர்பாக தேசிய மனித உரிமைஆணையமும், தமிழக அரசும் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்குசென்னை உயர் நீதிமன்ற முதன்மைஅமர்வுக்கு மாற்றப்படுகிறது என்றுகூறி விசாரணையை ஆக.9-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x