Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

புதுப்பட்டினம்-உய்யாலிகுப்பம் இடையே - கடல் அரிப்பை தடுப்பதற்கான தூண்டில் வளைவு : ஊரடங்கு தளர்வுகளால் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன

புதுப்பட்டினம்-உய்யாலிகுப்பம் இடையே கடல் அரிப்பை தடுப்பதற்காக ரூ.16.80 கோடி மதிப்பில் நேர்கல் தடுப்பு சுவர் மூலம் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் இடையே ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடல் சீற்றத்தால் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு மீன் இறங்கு தளம், வலை உலர்த்தும் கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும், கடற்கரை சேதமடைந்து மீன்பிடி படகுகளை நிறுத்த இடமில்லாமல் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இங்கு கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், புதுப்பட்டினம்-உய்யாலிகுப்பம் இடையே தூண்டில் வளைவு அமைக்க கடந்த 2020-ம் ஆண்டு ரூ.16.80 கோடி நிதி ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்தது. நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம், கடற்கரையில் 450 மீட்டர் நீளத்துக்கு நேர்கல் தடுப்புச் சுவர், தூண்டில் வளைவு மற்றும் மீன் ஏலக்கூடம் 2, வலை பின்னும் கூடம் 2, மீன் உலர்தளம் 2, ஆண் மற்றும் பெண்களுக்கான பொது கழிப்பறை ஆகியவற்றை அமைக்க திட்டமிடப்பட்டது.

இத்திட்டப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் பூமி பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தன. பின்னர், கரோனா ஊரடங்கு உத்தரவால் பணிகள் தடைபட்டன. தற்போது, தமிழக அரசின் படிப்படியான தளர்வுகளால் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன.

இந்த தூண்டில் வளைவு மூலம் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் பகுதி மீனவர்களுக்கு மீண்டும் படகுகளை நிறுத்த கடற்கரை கிடைக்க உள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x