Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

திமுக தேர்தல் அறிக்கைக்கு முரணான ஆளுநர் உரை : அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இபிஎஸ், ஓபிஎஸ் கருத்து

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்

சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியதாவது:

நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தாக்கல் செய்யும் அறிக்கையைவைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தற்போது அறிவித்துள்ளது. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக அறிவித்தது. ஆனால், நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன், பின் என திமுக மாறி மாறி பேசுகிறது. தேர்தல் அறிக்கைக்கு மாறாகத்தான் திமுகவின் செயல்பாடு இருக்கிறது.

திமுக ஆட்சி அமைத்து 44 நாட்கள் ஆகியும், பயிர்க் கடன்ரத்துக்கான சான்றிதழ்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. புதியபயிர்க் கடன்களுக்கான வழிமுறைகள், கல்விக் கடன் ரத்து, 5 பவுனுக்கு குறைந்த தங்க நகைக் கடன் ரத்து, மகளிர் சுயஉதவிக் குழு கடன் ரத்து,பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000, முதியோர் உதவித்தொகையை ரூ.1,500 ஆக உயர்த்துவது, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மீன்பிடி தடைக்கால நிதியுதவி உயர்வு உள்ளிட்ட திமுகவின் அறிவிப்புகள் குறித்த எந்த தகவலும் ஆளுநர் உரையில் இல்லை.

கரோனா பாதிப்பை சரியான முறையில் அரசு கையாளவில்லை. புள்ளிவிவரங்களை அரசு மறைக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குழப்பமான உரை

ஆளுநர் உரை குறித்து அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:

மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. 2020-ல் கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிககப்பட்டு வழங்கப்படுகிறது. ஆனால், 2021-ம்ஆண்டில் கரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படாதது ஏமாற்றமாக உள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்மீண்டும் கொண்டுவரப்படும் என்பதற்கான அறிவிப்பு இல்லை. துறைகளுக்கு பெயர் மாற்றம், நீட்தேர்வுக்கு குழு, முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு, கச்சத்தீவை மீட்க அழுத்தம் தரப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தாலும் அதனால் எந்த பெரிய மாற்றமும் நிகழப் போவதில்லை.

திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட முக்கியமான திட்டங்கள், ஆளுநர் உரையில் இல்லாததை பார்க்கும்போது, வாக்குறுதிகள் எல்லாம் ஆட்சியில் அமருவதற்காக அள்ளி வீசப்பட்டவையோ என்றஎண்ணம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது ஆளுநர் உரை அல்ல; உறுதிப்பாடு இல்லாத குழப்ப உரை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x