Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

செல்போன், சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைன் மோசடிகள் - பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை :

செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் நடக்கும் ஆன்லைன் மோசடிகள் குறித்து, பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட சைபர் கிரைம்போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சிலர் ஆன்லைன் மூலம் வேலை வாங்கித் தருவதாக கூறுவதுடன், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்று உங்களை தொடர்பு கொண்டால், உடனே அந்த அழைப்பை துண்டிக்க வேண்டும். அத்தகைய நபர்கள் குறித்து தெரியவந்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

பெண்கள் தங்களது புகைப்படங் களை வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்டசமூக வலைதளங்களில் பதிவேற்றம்செய்வதை தவிர்க்க வேண்டும். பெண்கள் மற்றும் குடும்பஉறுப்பினர்களின் புகைப்படங் களை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி பணம்கேட்டு யாராவது மிரட்டினால் உடனடியாக அருகில் உள்ள சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். மேலும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் பெண்கள் இணையதளம் வாயிலாக வீடியோ கால் மூலம் உரையாடுவதை தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால் அவ்வாறு உரையாடும் போது, அந்நபர்கள் உங்களை வீடியோவாக பதிவு செய்தோ, ‘ஸ்கிரீன் ஷாட்'எடுத்தோ பணம் கேட்டு மிரட்டலாம். இவ்வாறு யாராவது மிரட்டினால் பயப்படாமல் போலீஸில் புகார் அளிக்க வேண்டும். உங்களது செல்போன் எண்ணுக்கு தேவையின்றி வரும் குறுஞ்செய்திகளில் உள்ள ‘லிங்க்'கை தொடுவதை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்கள் வாட்ஸ்-அப் மூலம்தொடர்பு கொண்டு ஏதாவது நிறுவனத்தின் பெயரை கூறி பணத்தை இரட்டிப்பாக செய்து தருவதாக கூறினால் நம்பவேண்டாம். மேலும், வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக கூறி உங்களது வங்கி கணக்கு எண் மற்றும் அதுதொடர்பான விவரங்களை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டால் வழங்க வேண்டாம்.

உங்களது உறவினர்கள் பெயரை கூறி சமூக வலைதளங்களில் தொடர்பு கொண்டு அவசர தேவையாக பணம் கேட்டால், தொடர்புடைய நபரை தொடர்பு கொண்டு உறுதி செய்த பின் வழங்க வேண்டும். ஆன்லைனில் குறைந்த விலையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தருவதாக கூறினால் முன்பணம்செலுத்த வேண்டாம்.

இதயத்துடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை கண்டறியும் கருவி என்று கூறி எந்த ஒரு செயலியும்(ஆப்) பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.இதுபோன்ற செயலிகள் உங்களது கைரேகையை பயன்படுத்தி தகவல்களை திருட வாய்ப்பு உள்ளது. இதேபோல ஆன்லைனில் வரும் வாகனங்கள், பழைய எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையை நம்பக்கூடாது. பொதுஇடங்களில் உங்களதுவங்கி மற்றும் ரகசிய எண்களை பகிரக்கூடாது. உங்கள் குழந்தைகள் பணம்செலுத்தி ஆன்லைனில் விளையாடுவது குறித்து கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x