Published : 20 Jun 2021 03:15 AM
Last Updated : 20 Jun 2021 03:15 AM

போளூர் எழுத்தாளர் ரகுபதி காலமானார் :

திருவண்ணாமலை: போளூருக்கு பெருமை சேர்த்த எழுத்தாளர் சி.ரகுபதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வசந்தம் நகரில் வசித்தவர் சி.ரகுபதி (74). தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கராக பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். பிரபல எழுத்தாளரான இவர் தினசரி ஏடுகள், வார மற்றும் மாத இதழ்களில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கவிதைகளும் எழுதியுள்ளார்.

சி. ரகுபதி, ஐவரதி, சின்ன ரகுபதி, ஐவண்ணம் என்ற புனைபெயர் களிலும் சிறுகதைகள் எழுதியுள்ளார். இவருடைய 10 கதைகளை, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முக்தார் பத்திரி என்பவர் உருது மொழியில் வெளியிட்டுள்ளார். அவரது எழுத்தை அங்கீகரிக்கும் வகையில் பிரபல இதழ்கள் மற்றும் போளூர் அரிமா சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பரிசளித்து கவுரவித்துள்ளன.

போளூர் நகருக்கு பெருமை சேர்த்த எழுத்தாளர் சி.ரகுபதி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் மாலை உயிரிழந்தார். எழுத்துலகில் சாதித்து மறைந்த எழுத்தாளர் சி.ரகுபதிக்கு எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x