Published : 18 Jun 2021 03:13 AM
Last Updated : 18 Jun 2021 03:13 AM

நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தல் - பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் மனு : தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதி

தமிழக முதல்வரான பிறகு முதல்முறை யாக டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அப்போது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதி அளித்ததாக முதல்வர் கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், பதவி யேற்ற பிறகு முதல்முறையாக 2 நாள் பயணமாக நேற்று காலை டெல்லி சென் றார். டெல்லி விமான நிலையம், தமிழ் நாடு இல்லத்தில் அவருக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி மற்றும் திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப் போது துரைமுருகன், டி.ஆர்.பாலு, தமிழக தலைமைச் செயலர் வெ.இறை யன்பு ஆகியோர் உடனிருந்தனர். சுமார் 25 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப் பின்போது தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் அளித்தார். சந்திப்பு முடிந்ததும் தமிழ்நாடு இல்லம் திரும்பிய முதல்வர், செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

கரோனா பரவல் அதிகமாக இருந் ததால் முதல்வராக பதவியேற்றவுடன் பிரதமரை சந்திக்க முடியவில்லை. தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால் பிரதமர் மோடியை சந் தித்தேன். பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியான, மனநிறைவை தரக் கூடியதாக இருந்தது. முதல்வராக பதவியேற்ற எனக்கு பிரதமர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங் களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் தன்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று மோடி என்னிடம் தெரிவித்தார். தமிழகத்துக்குத் தேவையான திட்டங் கள், கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்துள்ளோம்.

தமிழகத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும், செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி நிறுவனங்களை முழுமையாக செயல்பட வைக்க வேண்டும். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதி ஆதாரங்களை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும். ஜிஎஸ்டி வரி பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண் டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை திட்டத் துக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். கோதாவரி - காவிரி, காவிரி - குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். புதிய மின்சார சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைப்பதுடன், கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். கரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடி யுரிமை வழங்க வேண்டும். தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சீரமைக்கப்பட வேண்டும். உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க வேண்டும்.

இடஒதுக்கீடு என்னும் சமூக நீதியின் அளவுகோலை மாநிலங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தை அமலாக்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். குடியுரிமைச் சட்டம், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்திருக்கிறேன்.

இதில் பல பிரச்சினைகள் நேரடி யாக மத்திய அரசு செய்ய வேண்டி யவை. சில கோரிக்கைகளுக்கு தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டியவை. சில பிரச்சினைகள் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டியவை. எனவே, மத்திய அரசுடன் இணைந்து தமிழகத் துக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறேன். பிரதமரிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.

கோரிக்கைகளை முன்வைத்த தோடு, அதற்கான காரண, காரியங் களை பிரதமர் மோடியிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ஆலோ சித்து நிச்சயம் நல்ல முடிவை எடுப் பேன் என்று பிரதமர் உறுதி அளித் துள்ளார். ‘உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்ற கருணாநிதியின் வழியில் தமிழக அரசின் செயல்பாடு இருக்கும்.

தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வில்லை என்பது உண்மைதான். இது பற்றி பிரதமரிடம் பேசினேன். போதுமான தடுப்பூசிகளை வழங்குவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

மீனவர்களுக்கு தேசிய ஆணையம், தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை, மதுரையில் சர்வதேச விமான நிலையம், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ மற்றும் சென்னை – சேலம் 8 வழிச் சாலை திட்டங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் பிரதமரிடம் அளித்த மனுவில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

வெளிப்படைத்தன்மை

தடுப்பூசி தொடர்பாக செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர், ‘‘மாநில அரசுகள் கேட்கும் அளவுக்கு தடுப்பூசி களை கொடுத்தால் வெளிப்படைத் தன்மை இருக்கும். தடுப்பூசி பற்றாக் குறையைக்கூட சொல்லக்கூடாது என்று மத்திய அரசு கூறி வருகிறது. அதிலிருந்தே இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலையை புரிந்து கொள்ளலாம். இதற்குமேல் சொல்ல வேண்டியதில்லை’’ என்று மத்திய அரசு மீது விமர்சனத்தை முன்வைத்தார். பேட்டியின்போது மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என்றே ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மதுக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்

டெல்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறியதாவது:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தை தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் 7 பேரை விடுவிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இப்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற போக்கை கவனித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்.

திமுக ஆட்சிக்கு வந்து 40 நாட்்கள் ஆகிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை எந்த அளவுக்கு நிறைவேற்றி வருகிறோம் என்பதை அனைவரும் அறிவர். நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவோம்.

டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுப்போம். கடந்தகால ஆட்சியில் எப்படி குறைக்கப்பட்டதோ அப்படி டாஸ்மாக் மதுக்கடைகள் குறைக்கப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x