Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM

தொடர் விபத்து, வாகன நெரிசலை தவிர்க்க திட்டம் - சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஆட்சியர் ஆய்வு :

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் பாதுகாப்பான போக்குவரத்தை ஏற்படுத்துவது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

சேலத்தில், கன்னியாகுமரி- காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சீலநாயக்கன்பட்டி, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சேலம் வருவதற்கான முக்கிய நுழைவு வாயிலாக உள்ளது. இங்கு, கன்னியாகுமரி-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையுடன், சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையும் இணைவதால், இங்குள்ள ரவுண்டானாவில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

மேலும் இங்கு அருகருகே 3 இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் இருக்கும் நிலையில், 2 தேசிய நெடுஞ்சாலைகள் பிரிந்து செல்லும் இடத்தில், ஒருவழிப்பாதை கொண்ட மேம்பாலம் உள்ளது.

இதனால், இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்து ஏற்படுவதும், அதில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாமல் உள்ளது.

எனவே, இங்குள்ள ஒற்றைவழி மேம்பாலத்தை இரு வழிப்பாதை கொண்டதாக விரிவாக்கம் செய்ய வேண்டும். சீலநாயக்கன்பட்டி சுற்று வட்டார மக்கள், தேசிய நெடுஞ்சாலையை பாதுகாப்பாக கடந்து வர மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சீல நாயக்கன்பட்டியில் சாலைகளில் உள்ள பாதுகாப்பு குறைவான இடங்கள், மாற்று வழிக்கான திட்டங்கள் ஆகியவை குறித்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது, சேலம் மாநகர காவல் துணை ஆணையர் வேதரத்தினம், சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி மற்றும் அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x