Published : 16 Jun 2021 03:13 AM
Last Updated : 16 Jun 2021 03:13 AM

வில்லிவாக்கம் ஏரி சீரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு :

வில்லிவாக்கம் ஏரி சீரமைக்கும் பணியினை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

அண்ணா நகர் மண்டலம் வில்லிவாக்கம் ஏரி சீரமைக்கும் பணியினை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வில்லிவாக்கம் ஏரியில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஏரியினை சுற்றி பசுமை பரப்பளவை ஏற்படுத்த மரம், செடி மற்றும் கொடிகளை அமைக்கவும், பக்கவாட்டு சுவர்களில் அழகிய படர் செடிகளை அமைக்கவும் உத்தரவிட்டார்.

இந்த ஏரியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் பொதுமக்கள் இலவசமாக நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும். மேலும், தனியார் பங்களிப்புடன் நீண்டகால பராமரிப்பு அடிப்படையில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார். தற்போது நடைபெற்று வரும் ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தியாகராய நகரில் பகுதி சார்ந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மாம்பலம் கால்வாய் மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். மாம்பலம் கால்வாயில் 5.5 கி.மீ. நீளத்துக்கு சீர்மிகுநகரத் திட்ட நிதியின்கீழ் சீரமைப்புப் பணிகள் 10 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதில் ஜி.என்.செட்டி சாலையில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகளை வருகிற ஆகஸ்ட் மாதத்துக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், இந்தக் கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க சென்னைபெருநகர் குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரிய அலுவலர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x