Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

அத்தியாவசியக் காரணங்கள் இல்லாமல் - வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள தொற்றாளர்களுக்கு அனுமதி இல்லை : மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

கரோனா தொற்று உறுதிசெய்யப்படும் நபர், அத்தியாவசியக் காரணங்கள் இல்லாமல், இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படாது என மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை வரதராஜபுரம் மாநகராட்சிப் பள்ளி, ராமநாதபுரம் மாநகராட்சி சமூகநலக்கூடம், கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள புனித பிரான்சிஸ்மேல்நிலைப்பள்ளி, தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய இடங்களில் நோயாளிகளைவகைப்படுத்துதல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஊரகப் பகுதிகளில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகள், சோமனூர், அரிசிபாளையம், பூலுவப்பட்டி, ஆனைமலை, கஞ்சம்பட்டி, நெகமம், நல்லட்டிபாளையம், தாளியூர், பொங்கலூர், கோயில்பாளையம், சுல்தான்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளை வகைப்படுத்தும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானவர்கள் முதலில் இந்த மையங்களுக்குத்தான் செல்லவேண்டும். அங்கு அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள், மிதமான பாதிப்பு, தீவிர பாதிப்பு உள்ளவர்களை வகைப்படுத்தி கரோனா தற்காலிக சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகளுக்குச் செல்லவும், சிலரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கின்றனர். இதில், அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருப்பவர்களுக்கு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், தொற்றாளர்கள் தங்களை முழுமையாக தனிமைப்படுத்திக் கொள்ளாமல் கடைகளுக்குச் செல்வது, வெளியே வந்து மற்றவர்களுடன் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதனால், மற்றவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “அத்தியாவசியமாக தேவைப்படுவோர் தவிர, மற்றவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கக்கூடாது என வகைப்படுத்துதல் மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டில் குழந்தைகள் உள்ள பெற்றோர், வயதான நிலையில் பார்த்துக்கொள்ள ஆட்கள் வேண்டும் என்ற சூழல் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். வலுவான காரணம் இல்லாமல், இனி வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படாது.

தினசரி தொற்று உறுதியாகும் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால், கரோனா தற்காலிக சிகிச்சை மையங்களில் படுக்கைகள் காலியாக உள்ளன. எனவே, வீடுகளுக்கு பதில் நோயாளிகள் அங்கு அனுப்பிவைக்கப்படுவர். இதனால், தொற்று பரவல் மேலும் குறையும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x