Published : 12 Jun 2021 07:00 AM
Last Updated : 12 Jun 2021 07:00 AM

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் 14-ம் தேதி முதல் - டாஸ்மாக், சலூன் கடைகள் திறக்க அனுமதி : கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மற்றும் சலூன் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கரோனா பரவல் குறித்து நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு, ஜூன் 14-ம் தேதி காலை 6 மணிக்கு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், தொற்றின் தன்மையை ஆய்வு செய்து, வரும் ஜூன் 21-ம் தேதி காலை 6 மணிவரை மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

இந்த ஊரடங்கில், அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

11 மாவட்டங்கள்

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்றுகட்டுக்குள் வந்தாலும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதை கருத்தில்கொண்டு இந்தமாவட்டங்களில், ஏற்கெனவேஅனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், கூடுதல் செயல்பாடுகளுக்கு ஜூன் 14 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

 தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள்இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

 மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 9 முதல் மாலை 5 மணிவரை சேவை கோருபவர் வீட்டுக்கு சென்று பழுதுநீக்கம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஆனால், இந்த வகை கடைகள் திறக்க அனுமதி இல்லை.

 மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படலாம்.

 வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்லலாம். டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பேரும், ஆட்டோக்களில் 2 பேரும் மட்டுமே பயணிக்கலாம்.

 வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுதுநீக்கும் கடைகள், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை செயல்படலாம்.

 மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 முதல் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படும்.

 ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

27 மாவட்டங்களில்

மேலே குறிப்பிடப்பட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்து, சென்னை உட்பட இதர 27 மாவட்டங்களில் கூடுதலாக கீழ்காணும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.

 அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமல், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6 முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்.

 அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின்கீழ் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 முதல் 9 மணி வரை நடைபயிற்சி மட்டும் மேற்கொள்ளலாம்.

 வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரையும், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9 முதல் பகல் 2 மணி வரையும் இயங்க அனுமதிக்கப்படும்.

 மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்.

 மிக்ஸி, கிரைண்டர், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடைகள், பழுதுநீக்கும் கடைகள் காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை திறந்திருக்கலாம்.

 டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

 கைபேசி மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படலாம்.

 பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.

 ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

 இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். தொழிலாளர்கள் 4 சக்கர வாகனங்களில் மட்டுமின்றி, தங்களது இரு சக்கர வாகனங்களிலும் இ-பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்கு சென்று வரலாம்.

 ஐடி, ஐடி சேவை நிறுவனங்களில் 20 சதவீதம் அல்லது 10 பேர் மட்டும் பணியாற்றலாம்.

 வீட்டு வசதி நிறுவனம், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கரோனா தொற்றை முற்றிலும் அகற்ற உதவ வேண்டும்.

கடைகளுக்கு கட்டுப்பாடு

ஊரடங்கில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளின் நுழைவு வாயிலில் சானிடைசர் கட்டாயம் வைக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். கடை பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிவதை உறுதி செய்யவேண்டும்.

அனைத்து கடைகளும், குளிர்சாதன வசதி இன்றி செயல்படுவதுடன், கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது சமூக இடைவெளிக்கான குறியீடுகள் போடப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

தடைதொடர்கிறது

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும் பொதுப் போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது. குறிப்பிட்ட முக்கியமான ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. துணி மற்றும்நகைக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. அடுத்து வரும் மாதங்களில் முகூர்த்த நாட்கள் வரும் நிலையில், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு தேவையான நகை, துணிவகைகளை வாங்குவோர் இதனால் தவித்து வருகின்றனர்.

தேநீர் கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கவில்லை. உணவகங்களில் குறிப்பிட்ட நேரங்களில்பார்சல் சேவை மட்டும் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x