Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM

நெடுங்காடு கொன்னக்காவலி பகுதியில்மதுபானக் கூடம் அமைக்க மக்கள் எதிர்ப்பு :

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கொன்னக்காவலி கிராமம் தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்துக்குட்பட்ட திருக்களாச்சேரி பகுதியையொட்டி அமைந்துள்ளது. கொன்னக்காவலி பகுதியில் மயிலாடுதுறை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள ஒரு இடத்தில், ஆட்டுப்பட்டி அமைக்கப் போவதாகக் கூறி, தனியார் மூலம் கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், தற்போது அந்தக் கட்டிடத்தில் மதுபானக் கூடம் அமைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகவும், இதனால் அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனவும் கூறி, மதுபானக் கூடம் அமைக்க அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது: இப்பகுதி விவசாய தொழிலை பிரதானமாக கொண்டுள்ளது. ஏற்கெனவே இப்பகுதியில் சாராயக்கடை, கள்ளுக்கடைகள் உள்ளன. தமிழக எல்லைப் பகுதியையொட்டி இருப்பதால், அங்கிருந்து ஏராளமானோர் இக்கடைகளுக்கு வரும் நிலையில் இங்கு வசிக்கக் கூடிய மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், இங்குள்ள சாராயக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என நாங்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்நிலையில் புதிதாக பார் வசதியுடன் கூடிய மதுக்கடை அமைக்க முயற்சிகள் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது.

இங்கு மதுக்கடை அமைக்கப்பட்டால் விவசாயப் பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அண்டை மாநிலப் பகுதிக்கு மது கடத்திச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறவும் வழி வகுக்கும். எனவே, இங்கு அமைப்பதாக கூறும் மதுக்கடையை வேறு இடத்தில் அமைக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x