Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM

தமிழ்வழி கல்வியை கட்டாயமாக்கிதமிழக அரசு உடனே சட்டம் இயற்ற வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்கி தமிழக அரசு உடனே சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்பது தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்களின் 30 ஆண்டு கனவு. ஆனால், தமிழை பயிற்றுமொழியாக்க எந்த அரசும் முழு மனதுடன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. 1990-களின் தொடக்கத்தில் பயிற்று மொழிஎன்ற நிலையில் இருந்து தமிழ்படிப்படியாக மறையத் தொடங்கியது. இன்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளியில் ஆங்கிலமேபயிற்று மொழியாக உள்ளது.

சீனா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும்தான் ஆங்கில வழிக் கல்வியே சிறந்தது என்ற மாயை ஏற்படுத்தப்பட்டு, தாய்மொழியான தமிழ் படுகொலை செய்யப்படுகிறது.

இதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்யும் அரசுகள் கவலைப்படவில்லை. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 6-ம் தேதி, தமிழ் உள்ளிட்ட8-வது அட்டவணை மொழிகள் அனைத்தையும் தேசிய ஆட்சி மொழிகளாக அறிவிக்கச் செய்யப்போவதாக முதல்வர் கூறியுள்ளார். அவரது மொழியுணர்வு பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் அந்த உணர்வு அவரது அடி மனதில் இருந்து எழுந்ததாக இருந்தால், முதல்கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி இறுதி வகுப்புவரை தமிழை கட்டாய பயிற்றுமொழியாக அறிவிக்க சட்டம் இயற்ற வேண்டும்.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் 29 (எஃப்) பிரிவில், ‘நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ‘நடைமுறைக்கு சாத்தியமாகும் வகையில்’ என்பதை மட்டும் நீக்கி, கல்வி உரிமைச் சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்து, அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இவற்றை சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அதன்மூலம் தமிழ் மொழி மீதான பற்றை திமுக அரசு நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x