Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

அத்தியாவசிய தேவையின்றி சுற்றியதால் காரை பறிமுதல் செய்ய முயன்றபோது - போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர் : சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ; 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் நேற்றும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதையடுத்து அத்தியாவசிய தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதன்படி, நேற்று காலை சேத்துப்பட்டு சிக்னலில் சேத்துப்பட்டு போக்குவரத்து தலைமைக் காவலர்கள் ஆனந்த், பிரபாகரன், ரஞ்சித் குமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சேத்துப்பட்டு குருசாமி பாலத்திலிருந்து நுங்கம்பாக்கம் வழியாக வந்துகொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்தி தணிக்கை செய்தனர். காரில் இருந்த பெண்ணை விசாரித்தபோது, அவர் மீன் வாங்குவதற்காக மெரினா கடற்கரைக்கு செல்வதாக கூறினார்.

இதையடுத்து, “அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்ல அனுமதி இல்லை. எனவே, உங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. உங்களுடைய வாகன ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) வேண்டும்” என போலீஸார் கூறியுள்ளனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து காரை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அந்தப் பெண், போக்குவரத்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், செல்போன் மூலம் தனது வீட்டுக்கு தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் சொகுசு காரில் வந்திறங்கிய அவரது தாயார் போலீஸாரை கடுமையாக விமர்சித்தார்.

“எனது மகளின் காரை எப்படி தடுத்து நிறுத்தலாம், நான் யார் தெரியுமா? வழக்கறிஞர், வாயை மூடு” என கடுமையான வார்த்தைகளால் போலீஸாரை வசைபாடினார். பின்னர், போலீஸாரின் பேச்சையும் மீறி மகள் ஓட்டிச் சென்ற காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். போலீஸார் விதித்த அபராதத் தொக்கான ரசீதையும் தூக்கி எறிந்தார்.

போக்குவரத்து தலைமைக் காவலர் ரஞ்சித் குமார் இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, தொடர்புடைய பெண் வழக்கறிஞர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் உதவி ஆணையர் ஜூலியஸ் கிறிஸ்டோபர் கூறும்போது, “கரோனா தடுப்பு பணியில் காவலர்கள் முன்களப் பணியாளர்களாக சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி செய்து வருகிறோம். கரோனாவால் எங்களில் பலர் உயிரிழந்து விட்டனர். எங்கள் குடும்பத்தினரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பணி போக வழக்கமான எங்களது பணிகளையும் கவனிக்கிறோம். இதையும் தாண்டி நாங்கள் களத்தில் பணியில் இருக்கும்போது ஒரு சிலரின் செயல்பாடு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எங்களுக்கு எந்த சிறப்பு மரியாதையும் வேண்டாம். மக்களுக்காகத்தான் நாங்கள் களத்தில் நிற்கிறோம் என்பதை பொது மக்கள் உணர்ந்து ஒத்துழைப்பு அளித்தாலே போதும்” என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வர்க்கீஸ் கூறும்போது, “ஊரடங்கு காரணமாக மக்களில் பலர் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இன்னும் பலர் வாழ்வை தொலைத்து விடக்கூடாது என ஓடிக்கொண்டு மன அழுத்தத்தில் உள்ளனர். இதனால் சிலர் ஊரடங்கை மீறுவதை சட்டம் கொண்டு பார்க்காமல் மனசாட்சியுடன் அணுக வேண்டும். காவல் துறையினரின் பணி ஊரடங்கில் மெச்சத் தகுந்ததாக உள்ளது. இருப்பினும் ஒரு சிலர் எல்லை மீறுவதை காண முடிகிறது. எனவே ஊரடங்கில் அனைவரும் கட்டுப்பாடு மற்றும் பொறுமையை கையாள வேண்டும்” என்றார்.பலர் வாழ்வை தொலைத்து விடக்கூடாது என ஓடிக்கொண்டு மன அழுத்தத்தில் உள்ளனர். இதனால் சிலர் ஊரடங்கை மீறுவதை சட்டம் கொண்டு பார்க்காமல் மனசாட்சியுடன் அணுக வேண்டும்.

காவல் துறையினரின் பணி ஊரடங்கில் மெச்சத் தகுந்ததாக உள்ளது. இருப்பினும் ஒரு சிலர் எல்லை மீறுவதை காண முடிகிறது. எனவே ஊரடங்கில் அனைவரும் கட்டுப்பாடு மற்றும் பொறுமையை கையாள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x