Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் - வாக்குப் பதிவும் ஒப்புகை சீட்டின் எண்ணிக்கையும் 100 சதவீதம் சரி : தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை

நாட்டில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரங்களில் ஊடுருவி, குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக வாக்குகள் பதிவாகும்படி செய்ய முடியும் என்று தொடர்ந்து குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பானவை. அதில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என்று தலைமை தேர்தல் தொடர்ந்து கூறிவருகிறது.

அதன்பின், வாக்குப் பதிவு இயந்திரத்துடன், விவிபாட் எனப்படும் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டது. வாக்கு அளித்தவுடன், எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்று விவிபாட் இயந்திரம் காட்டும். அந்த இயந்திரம் ஒப்புகை சீட்டும் வழங்கும். ஆனால், ஒப்புகை சீட்டு வாக்காளர்களின் கைக்கு வராது. அந்த இயந்திரத்துக்குள்ளேயே விழுந்து விடும்.

விவிபாட் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு சில வாக்குச் சாவடிகளில் இருந்து இவிஎம் கருவிகளையும், அதன் விவிபாட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டுகளையும் ஒப்பிட்டு உண்மைதன்மை அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த முறையும் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. ஆனால், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தன. இந்நிலையில், 5 மாநிலங்களிலும் உள்ள 822 தொகுதிகளிலும் இவிஎம், விவிபாட் கருவிகளில் வாக்குகளின் எண்ணிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் ஒப் பிட்டு பார்த்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 இவிஎம் - விவிபாட் இயந்திரங்களில் வாக்குகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதன்படி, சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் 4,412 விவிபாட் இயந்திரங்களும் இடைத்தேர்தலில் 202 விவிபாட் இயந்திரங்களும் ஒப்பிட்டு பார்ப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் இருந்த ஒப்புகை சீட்டுகளும் பதிவான வாக்குகளும் 100 சதவீதம் பொருந்தி வந்தன.

மேற்கு வங்கத்தில் 1,492, தமிழகத்தில் 1,183, கேரளாவில் 728, அசாமில் 647, புதுச்சேரியில் 156 விவிபாட் இயந்திரங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. திருப்பதி, பெல்காம், மலப் புரம், கன்னியாக்குமரி ஆகிய 4 நாடாளு மன்ற தொகுதி இடைத்தேர்தலில் 202 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த இவிஎம் - விவிபாட் களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 100 சதவீதம் சரியாக இருப்பது, நம்பகத்தன்மை உறுதிப்படுத்தி உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x