Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

புதுச்சேரி பாஜகவினர் நியமனத்தை செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கு - 3 எம்எல்ஏ நியமனத்துக்கு தடையில்லை : தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்எல்ஏ-க்களின் நியமனம் செல்லாது என அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகந்நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம்உள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றிய என்.ஆர்.காங்கிரஸ், பாஜக எம்எல்ஏ-க்கள் 6 பேரதுஆதரவுடன் ஆட்சி அமைக்கஉள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி கடந்த மே 7-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 10-ம் தேதியன்று அவர் கரோனா பாதிப்புகாரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பாஜகவைச் சேர்ந்த கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக்பாபு ஆகிய 3 பேரையும் நியமன எம்எல்ஏ-க்களாக மத்திய அரசு நியமித்துள்ளது.

அமைச்சரவையே பதவியேற்காத நிலையில் பாஜக சார்பில் 3 நியமன எம்எல்ஏ-க்கள் உரிய பரிந்துரைப்படி முறையாக நியமிக்கப்படவில்லை. அமைச்சரவை பொறுப்பேற்ற பிறகு 3 நியமன எம்எல்ஏ-க்களை நியமிக்க துணை ஆளுநருக்கு பரிந்துரைக்கும். துணை நிலை ஆளுநர் அந்த பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைப்பார். அதன்பிறகு குடியரசுத் தலைவர் 3 நியமன எம்எல்ஏ-க்களை நியமிப்பதுதான் மரபு.

மேலும், சட்டரீதியாக பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை மட்டுமே நியமன எம்எல்ஏ-க்களாகநியமிக்க வேண்டும். ஆனால் பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏ-க்களாக நியமிக்கப்பட்டிருப்பது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அவர்களின் பின்புலம் பற்றியும் ஆராயப்படவில்லை. இந்த நியமனம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. எனவே இந்த நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.ஞானசேகர் ஆஜராகி வாதிட்டார். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், புதுச்சேரி அரசு தரப்பு வழக்கறிஞர் என்.மாலா ஆகியோர், அரசுப் பணியில் இருப்பவர்களை நியமன எம்எல்ஏ-க்களாக நியமிப்பதற்கு மட்டுமே சட்டரீதியாக தடை உள்ளது.

புதுச்சேரியில் தற்போது 3 பேர்நியமன எம்எல்ஏ-க்களாக நியமிக்கப்பட்டதில் எந்த சட்டவிரோதமும் இல்லை, என வாதிட்டனர். அதேபோல 3 நியமன எம்எல்ஏ-க்கள்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து இருந்தனர். இந்நிலையில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், அரசியலமைப்பு சட்டம் மற்றும் யூனியன் பிரதேச சட்டம் ஆகியவற்றில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன.

ஆனால் மனுதாரரின் குற்றச்சாட்டு இந்த தகுதி நீக்கம் தொடர்பான வரையறைக்குள் வரவில்லை. சட்டரீதியாக இந்த 3 நியமன எம்எல்ஏ-க்களை நியமிக்க எந்த தடையும் இல்லை. சட்டவிரோதமும் அல்ல. எப்போது அமைச்சரவை பதவியேற்று பொறுப்புக்கு வருமோ அப்போது இந்த 3 நியமன எம்எல்ஏக்களும் அதில் பங்கெடுத்துக் கொள்வர்.

இவர்களின் நியமனத்துக்கு தடை கோரி தொடரப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது, என தீர்ப்பளித்துள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x