Published : 03 Jun 2021 03:14 AM
Last Updated : 03 Jun 2021 03:14 AM

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம் : உறவினர்கள் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளர் இறந்ததை அடுத்து, சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராதாபுரம் அருகே உள்ள வையக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ஆனந்த இசக்கியப்பன் (25). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக புணிபுரிந்துவந்தார். இவருக்கு சிந்தியா (23) என்ற மனைவி உள்ளார். ஆனந்த இசக்கியப்பன் கடந்த 26- ம் தேதி வடக்கன்குளம் அருகே உள்ள வேப்பிலாங்குளம் பகுதியில், காற்றில் பழுதடைந்த மின்கம்பத்தில் ஏறி, பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கி, பலத்த காயமடைந்த அவர், நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் வடக்கன்குளம் பிரதான சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ராதாபுரம் வட்டாட்சியர் கனகராஜ், மின்வாரிய கோட்டப் பொறியாளர் சுகுர்தலன், இளநிலைப் பொறியாளர் ராஜன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இறந்தவரின் மனைவி சிந்தியாவுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என, சட்டப்பேரவைத் தலைவர் உறுதி அளித்தார். மேலும், மின்வாரிய விதிமுறைப்படி நிவாரண உதவி வழங்கவும் மின்வாரியத்தினர் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x